மைசூரு பாதயாத்திரை பா.ஜ.,வுக்கு அனுமதி கிடைக்குமா?
மைசூரு பாதயாத்திரை பா.ஜ.,வுக்கு அனுமதி கிடைக்குமா?
மைசூரு பாதயாத்திரை பா.ஜ.,வுக்கு அனுமதி கிடைக்குமா?
ADDED : ஜூலை 30, 2024 07:43 AM

பெங்களூரு: ''பாதயாத்திரைக்கு நாங்கள் அனுமதி தர மாட்டோம். பா.ஜ.,வினர் அரசியல் செய்கின்றனர். எனவே நாங்களும் அரசியல் செய்ய வேண்டியுள்ளது,'' என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 'மூடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில், 14 மனைகள் ஒதுக்கப்பட்டன. மனைவிக்கு, அவரது அண்ணன் தானமாக வழங்கியதாக முதல்வர் தெரிவித்தார்.
ஆனால், இதில் முறைகேடு நடந்துள்ளதாக பா.ஜ., - ம.ஜ.த., கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
முறைகேட்டை கண்டித்து, ஆகஸ்ட் 3ம் தேதி காலை 8:30 மணிக்கு, பெங்களூரு கெங்கேரி கெம்பம்மா கோவிலில் பூஜை செய்துவிட்டு, மைசூரு வரை பாதயாத்திரை செல்வதற்கு இரு கட்சித் தலைவர்களும் முடிவு செய்திருந்தனர்.
முன்னேற்பாடுகள்
இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தலைமையில், பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடந்தது.
பின், அவர் கூறியதாவது:
ஆகஸ்ட் 3ம் தேதி, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மத்திய அமைச்சர்கள் குமாரசாமி, பிரஹலாத் ஜோஷி, பாதயாத்திரையை துவக்கி வைக்கின்றனர்.
இதில், மாநிலத்தின் 224 சட்டசபை தொகுதிகளைச் சேர்ந்த இரு கட்சித் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.
தினமும் 20 கி.மீ., துாரம் நடந்து செல்வோம். இடையில் குறிப்பிட்ட இடத்தில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும். ஆக., 10ல் மைசூரில் பொதுக்கூட்டம் நடத்தி, பாதயாத்திரை நிறைவுபெறும்.
பல்வேறு ஊழல் மூலம், மாநில அரசு 4,000 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்துள்ளது. இதற்கு பொறுப்பேற்று சித்தராமையா, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டம்
இந்த பாதயாத்திரை குறித்து, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், பெங்களூரில் நேற்று கூறியதாவது:
பாதயாத்திரைக்கு நாங்கள் அனுமதி தர மாட்டோம். அவர்கள் போராட்டம் நடத்தட்டும். நாங்கள் வேண்டாம் என்று கூற மாட்டோம். ஆனால், பாதயாத்திரைக்கு போலீசார் அனுமதி தர மாட்டார்கள்.
காங்கிரஸ் பாதயாத்திரை நடத்த முயற்சித்தபோது, பா.ஜ., அரசு எங்களுக்கு அனுமதி தரவில்லை. நாங்களும் அனுமதி இல்லாமல் தான் செய்தோம். அது போன்று அரசு அனுமதி தராது.
அதே வேளையில் அவர்களுக்கு பிரச்னை ஏற்படாதவாறு கவனித்துக் கொள்வோம். பா.ஜ., பாதயாத்திரைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், துணை முதல்வர் சிவகுமார் திட்டம் வகுத்துள்ளார்.
பா.ஜ.,வினர் அரசியல் செய்கின்றனர். எனவே நாங்களும் அரசியல் செய்ய வேண்டி உள்ளது. இதை அரசு மூலம் செய்யாமல், காங்கிரஸ் கட்சி மூலம் செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.