பா.ஜ.,வுக்கு திரும்ப ஈஸ்வரப்பா ஆர்வம் எடியூரப்பா ஆதரவாளர்கள் முட்டுக்கட்டை
பா.ஜ.,வுக்கு திரும்ப ஈஸ்வரப்பா ஆர்வம் எடியூரப்பா ஆதரவாளர்கள் முட்டுக்கட்டை
பா.ஜ.,வுக்கு திரும்ப ஈஸ்வரப்பா ஆர்வம் எடியூரப்பா ஆதரவாளர்கள் முட்டுக்கட்டை
ADDED : ஜூன் 24, 2024 04:42 AM

பெங்களூரு, : லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு, தோல்வி அடைந்த முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, மீண்டும் பா.ஜ.,வுக்கு திரும்ப தயாராகிறார். கட்சி மேலிடத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறார்.
கடந்த 2023, சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வின் மூத்த தலைவர்களுக்கு, பா.ஜ., 'சீட்' மறுக்கப்பட்டது. இவர்களில் ஈஸ்வரப்பாவும் ஒருவர். சீட் கிடைக்கவில்லை என்பதற்காக, லட்சுமண் சவதி, ஜெகதீஷ் ஷெட்டர் உட்பட சிலர் கட்சிக்கு 'டாட்டா' காண்பித்து, காங்கிரசுக்கு தாவினர். ஆனால் ஈஸ்வரப்பா சமாதானமாக இருந்தார்.
லோக்சபா தேர்தலில் ஹாவேரி தொகுதியில் தன் மகன் காந்தேஷுக்கு, அவர் சீட் எதிர்பார்த்தார். ஆனால் பசவராஜ் பொம்மைக்கு சீட் கிடைத்தது. கொதிப்படைந்த ஈஸ்வரப்பா, ஷிவமொகா தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் ராகவேந்திராவை எதிர்த்து, சுயேச்சையாக களமிறங்கினார். தொகுதியை சுற்றி வந்து பிரசாரமும் செய்தார்.
'நான் வெற்றி பெறுவது உறுதி. பா.ஜ.,வை எடியூரப்பா குடும்பத்தின் பிடியில் இருந்து காப்பாற்றவே, சுயேச்சையாக போட்டியிடுகிறேன். வெற்றி பெற்று எம்.பி.,யாக கட்சிக்கு திரும்புவேன்' என சவால் விடுத்தார். வேட்புமனுவை திரும்ப பெறும்படி கட்சி மேலிடம் உத்தரவிட்டும், பொருட்படுத்தவில்லை. எனவே கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகள் நீக்கப்பட்டார்.
தேர்தலில் ஈஸ்வரப்பாவுக்கு, டிபாசிட்டும் கிடைக்கவில்லை; இதற்காக அவர் வருத்தப்படவில்லை. பா.ஜ.,வுக்கு திரும்ப தயாராகிறார். ஆர்.எஸ்எஸ்., மற்றும் பா.ஜ., மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். மேலிடத்தின் உத்தரவை எதிர்பார்த்து காத்திருக்கிறார். பச்சைக்கொடி காண்பித்ததும் சில நாட்களில் கட்சியில் சேருவார்.
ஆனால் ஈஸ்வரப்பாவை கட்சியில் சேர்க்க, எடியூரப்பா ஆதரவாளர்கள் முட்டுக்கட்டை போடுகின்றனர். எடியூரப்பா, ராகவேந்திரா, விஜயேந்திராவை பற்றி கடுமையாக விமர்சித்த ஈஸ்வரப்பாவை, கட்சியில் சேர்க்க கூடாது என, மேலிடத்துக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.