வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட 200 சொகுசு கார்கள்!
வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட 200 சொகுசு கார்கள்!
வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட 200 சொகுசு கார்கள்!
ADDED : செப் 25, 2025 01:15 AM

கொச்சி: கேரளாவில் சுங்கத்துறை மற்றும் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்டு, மோசடியாக விற்பனை செய்யப்பட்ட 200 சொகுசு கார்கள் இம்மாநிலத்தில் பயன்பாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டுக்கு நேரடியாக இறக்குமதி செய்யப்படும் சொகுசு கார்களுக்கு, காரின் விலையில், 100 முதல் 200 சதவீதம் வரை வரி விதிக்கப் படுகிறது.
விற்பனை இந்நிலையில், நம் அண்டை நாடான பூட்டானில் ராணுவ உயரதிகாரிகள் பயன்படுத்திய, 'லேண்ட் க்ரூஸர், லேண்ட் ரோவர்' உள்ளிட்ட சொகுசு கார்களை, கொச்சியைச் சேர்ந்த ஒரு கும்பல் ஏலத்திற்கு எடுத்துள்ளது.
அதை சட்டவிரோதமாக எல்லை தாண்டி கடத்தி வந்து, ஹிமாச்சல பிரதேசத்தில் பதிவு செய்து நாடு முழுதும் விற்பனை செய்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த வருவாய் புலனாய்வு துறை மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள், 'ஆப்பரேஷன் நும்கோர்' என்ற பெயரில் நாடு முழுதும் நேற்று முன்தினம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், கேரளாவின் பிரபல திரைப்பட நடிகர்கள் பிருத்விராஜ், மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் ஆகியோரின் இடங்களிலும் சோதனை நடந்தன. துல்கர் சல்மானிடம் இது போன்ற இரண்டு சட்டவிரோத சொகுசு கார்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து கொச்சி சுங்க இயக்குநரகத்தின் கமிஷனர் திஜு நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
-பூட்டானில் இருந்து நம் நாட்டு எல்லை வழியாக அதிக விலை உடைய பயன்படுத்தப்பட்ட கார்கள் கடத் தப்பட்டுள்ளதாக உளவுத்தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சோதனைகள் நடத்தப்பட்டன.
சுற்றுலா அனுமதி மற்றும் காரை பிரித்து கன்டெய்னர்களில் அடைத்து, எல்லை தாண்டி இங்கு கொண்டு வந்துள்ளனர். இதில் கொச்சியை சேர்ந்த ஒரு கும்பல் செயல்பட்டு உள்ளது.
நம் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின், இந்த வாகனங்கள் ராணுவம் மற்றும் அமெரிக்க துாதரகத்திற்கு சொந்தமானவை போல் காட்ட போலி ஆவணங்கள் தயாரித்துள்ளனர். அதன் பின் ஹிமாச்சல பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டன.
வாகனங்களின் தகவல்களை வழங்கும் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின், 'பரிவாஹன்' தளத்திலும், வாகனத்தின் உரிமையாளர் விபரங்கள் மாற்றப்பட்டுள்ளன.
அங்கு உள்ள ஊழியர்களை பயன்படுத்தியோ அல்லது 'ஹேக்கிங்' எனப்படும் கணினியை சட்டவிரோதமாக கட்டுப்பாட்டில் எடுத்தோ இதை செய்திருக்க வாய்ப்புள்ளது.
இந்த விபரங்களை நம்பி நடிகர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இந்த சட்டவிரோத சொகுசு கார்களை வாங்கி உள்ளனர். தெரியாமல் வாங்கி இருந்தாலும் இந்த கார்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும்.
நிதியுதவி நேற்று முன்தினம் நடந்த சோதனையில் 36 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் இரண்டு கார்கள் நடிகர் துல்கர் சல்மானுக்கு சொந்தமானவை. நடிகர் பிருத்விராஜின் கார்கள் எதுவும் சோதனையில் சிக்கவில்லை.
கேரளாவில் மட்டும் இது போன்று கடத்தி வரப்பட்ட 200 கார்கள் பயன்பாட்டில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சோதனையில், வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட கார்களில் போதைப் பொருள் மற்றும் தங்கம் கடத்தல் நடவடிக்கையிலும் குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது. சொகுசு கார் விவகாரத்தில் புழங்கும் பணம், பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளிக்க வழங்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.