Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து தீவிர சிகிச்சை பிரிவில் 6 பேர் பலி

ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து தீவிர சிகிச்சை பிரிவில் 6 பேர் பலி

ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து தீவிர சிகிச்சை பிரிவில் 6 பேர் பலி

ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து தீவிர சிகிச்சை பிரிவில் 6 பேர் பலி

ADDED : அக் 07, 2025 06:09 AM


Google News
Latest Tamil News
ஜெய்ப்பூர் : ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஆறு பேர் பலியாகினர்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில், எஸ்.எம்.எஸ்., எனப்படும், சவாய் மான் சிங் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

ஜெய்ப்பூர் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீவிர சிகிச்சை இந்த மருத்துவமனையின் இரண்டாவது மாடியில், 4 ஐ.சி.யு., எனப்படும், தீவிர சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

மூன்று பிரிவுகளில், தலா 40 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அவசர கால சிகிச்சை பிரிவுக்கான ஐ.சி.யு.,வில், 21 பேர் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மருத்துவமனையின் இரண்டாம் தளத்தில் உள்ள கிடங்கில் நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அருகில் இருந்த அவசரகால சிகிச்சை பிரிவு ஐ.சி.யு.,விலும் தீ வேகமாக பரவியது.

இதையடுத்து, அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அலறியபடி வெளியேறினர். பெரும்பாலான நோயாளிகள், எழுந்து நடக்க முடியாத நிலையில் இருந்ததால், தீ மற்றும் புகைமூட்டம் காரணமாக அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

தீ விபத்து ஏற்பட்டதை அறிந்த நோயாளிகளின் உறவினர்கள், ஐ.சி.யு.,வில் இருந்தவர்களை படுக்கையுடனேயே வெளியே துாக்கி வந்தனர். இரண்டு மணிநேரப் போராட்டத்துக்கு பின் தீ, மருத்துவமனையின் பிற பகுதிகளில் பரவாமல் தடுக்கப்பட்டது.

இந்த விபத்தில், ஐ.சி.யு.,வில் சிகிச்சை பெற்று வந்த ஆறு பேர் பலியாகினர். இதில், பெரும்பாலானோர் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சிகிச்சையில் இருந்த ஐந்து பேர் காயமடைந்தனர். ஐ.சி.யு., அறையில் இருந்த ஆவணங்கள், மருத்துவ உபகரணங்கள் தீயில் எரிந்து நாசமாகின.

விசாரணை தீ விபத்து குறித்து அவசர கால சிகிச்சை மைய தலைவர் டாக்டர் அனுராக் தகாத் கூறுகையில், “முதல்கட்ட தகவலின்படி, மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

''இதில், இரண்டு பெண்கள், நான்கு ஆண்கள் என ஆறு பேர் உயிரிழந்தனர். பிற ஐ.சி.யு.,வில் சிகிச்சை பெற்று வரும் 150க்கும் மேற்பட்ட நோயாளிகள் பத்திரமாக உள்ளனர்,” என்றார்.

சம்பவ இடத்தை பா.ஜ.,வை சேர்ந்த முதல்வர் பஜன்லால் சர்மா மற்றும் அமைச்சர்கள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

விபத்து குறித்து நோயாளிகளின் உறவினர்கள் கூறுகையில், 'தீ விபத்து ஏற்பட்டது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் உடனடியாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை.

'தீ வேகமாக பரவியதால் அங்கிருந்த ஊழியர்கள் அறையை பூட்டிவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

'ஜன்னல் கதவுகள், கண்ணாடிகளை உடைத்து எங்கள் உறவினர்களை மீட்டோம்.

'இருப்பினும், அவர்களை காப்பாற்ற முடியவில்லை. இந்த விபத்துக்கு மருத்துவமனையே பொறுப்பு' என்றனர்.

தீ விபத்தால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உடற் கூறாய்வுக்கு பின், இறந்தவர்களின் உட ல்கள், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

தீ விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us