குடிக்க தண்ணீர் தரலை நின்று போன திருமணம்
குடிக்க தண்ணீர் தரலை நின்று போன திருமணம்
குடிக்க தண்ணீர் தரலை நின்று போன திருமணம்
ADDED : மார் 17, 2025 12:26 AM

சாம்ராஜ் நகர்: கர்நாடகாவில், குடிநீர் விஷயத்தில் ஏற்பட்ட தகராறில், திருமணமே நின்று போனது.
கர்நாடக மாநிலம், தாவணகெரே ஜகளூரில் வசிப்பவர் மனோஜ் குமார், 27. துமகூரு பகுதியைச் சேர்ந்தவர் அனிதா, 22. இருவரும் பொறியியல் பட்டதாரிகள். இவர்களுக்கு குடும்பத்தினர் சம்மதத்துடன், திருமணம் நிச்சயமானது.
சித்ரதுர்கா, ஹரியூரில் உள்ள மண்டபத்தில் நேற்று திருமணம் நடக்கவிருந்தது. நேற்று முன்தினம் இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இரண்டு குடும்பங்களின் உறவினர்கள், நண்பர்கள், விருந்தினர்கள் என, ஏராளமானோர் மண்டபத்தில் கூடியிருந்தனர். திருமண சடங்குகள் நடத்தப்பட்டன.
வரவேற்பு நிகழ்ச்சிக்கு சிலர் தாமதமாக வந்தனர். அவர்கள் உணவுக்காக அமர்ந்திருந்தனர். அப்போது கேட்டரிங் ஊழியர்கள், விருந்தினர்களுக்கு குடிநீர் கொடுக்கவில்லை. இது சலசலப்பாகி, இறுதியில் மணமகன், மணமகள் குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டது.
இரவு துவங்கிய தகராறு, நேற்று காலையும் நீடித்தது. உறவினர்கள் எவ்வளவோ சமாதானம் செய்தும் பிரச்னை சரியாகவில்லை. நேற்று காலை, 10:30 மணிக்கு முகூர்த்தம் குறிக்கப்பட்டிருந்தது.
ஆனால், மணமகள் அனிதா, திடீரென தனக்கு இந்த திருமணமே வேண்டாம் என கூறினார். அவரை சமாதானம் செய்ய உறவினர்கள் செய்த முயற்சி பலன் அளிக்கவில்லை.
ஒரு கட்டத்தில், மணமகன் மனோஜ் குமாரும் திருமணம் வேண்டாம் என கூறியதால், கடைசி நேரத்தில் திருமணம் நின்று போனது. அனைவரும் மண்டபத்தில் இருந்து வெளியேறினர்.