கையில் விலங்குடன் மாமியார் வீட்டு முன் வினோத டீ கடை நடத்தி போராடும் இளைஞர்
கையில் விலங்குடன் மாமியார் வீட்டு முன் வினோத டீ கடை நடத்தி போராடும் இளைஞர்
கையில் விலங்குடன் மாமியார் வீட்டு முன் வினோத டீ கடை நடத்தி போராடும் இளைஞர்
ADDED : ஜூன் 15, 2025 12:13 AM

அன்டா : தன் மீது சுமத்தப்பட்ட வரதட்சணை கொடுமை குற்றச்சாட்டை எதிர்கொள்ள ராஜஸ்தானில், மாமியார் வீட்டு எதிரே கையில் விலங்குடன் இளைஞர் ஒருவர் தேநீர் கடை நடத்தி வருவது கவனத்தை ஈர்த்துள்ளது.
தேனீ வளர்ப்பு
மத்திய பிரதேசம் நிமூச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் தகாத். ராஜஸ்தானின் பாரனில் உள்ள அன்டா பகுதியைச் சேர்ந்த மீனாட்சி மாளவை, 2018ல் திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் சேர்ந்து தேனீ வளர்ப்பு தொழில் செய்து வந்தனர். பெரிய அளவு லாபம் கிடைக்காததால், அத்தொழில் சரிவை சந்தித்தது. இந்த சூழலில், வரதட்சணை கேட்டு கணவர் துன்புறுத்துவதாக மனைவி போலீசில் புகார் அளித்தார்.
வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியதாக, 498ஏ பிரிவின் கீழ் கிருஷ்ணகுமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த சட்டப் போராட்டத்தில் நீதிமன்ற விசாரணைக்காக, அவர் அடிக்கடி ராஜஸ்தான் வரும் சூழ்நிலை உருவாகியது.
வழக்கை எதிர்கொள்ளவும், பொருளாதார ரீதியாக தன்னை நிலைப்படுத்திக் கொள்ளவும் தேநீர் கடை ஒன்றை தன் மாமியார் வீட்டு எதிரே கிருஷ்ணகுமார் சமீபத்தில் துவங்கினார்.
அந்தக் கடைக்கு, '498 ஏ - டீ கபே' என பெயர் வைத்தார். அவர் மீது தொடரப்பட்ட வழக்கின் பிரிவே கடையின் பெயரானது.
கடையில் டீ போடும் கிருஷ்ணகுமார், ஒரு கையில் விலங்கு பூட்டியபடியே பணிகளை கவனித்து வருகிறார். இது, அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சமூக விழிப்புணர்வு
'எனக்கு நீதி கிடைக்கும் வரை, தேநீர் கொதிக்கும்' என, கடையில் வைக்கப்பட்டுள்ள வாசகமும் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. தன் மீது சுமத்தப்பட்ட பொய் பழிக்கு எதிராக சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இந்த கடையை துவங்கியுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.