மனை ஒதுக்கீடு ஊழலில் முதல்வர் சித்தராமையா மீது... நடவடிக்கை! காங்., - எம்.எல்.சி., ஹரிபிரசாத் மறைமுக கோரிக்கை
மனை ஒதுக்கீடு ஊழலில் முதல்வர் சித்தராமையா மீது... நடவடிக்கை! காங்., - எம்.எல்.சி., ஹரிபிரசாத் மறைமுக கோரிக்கை
மனை ஒதுக்கீடு ஊழலில் முதல்வர் சித்தராமையா மீது... நடவடிக்கை! காங்., - எம்.எல்.சி., ஹரிபிரசாத் மறைமுக கோரிக்கை
ADDED : ஜூலை 10, 2024 04:22 AM

'மைசூரு நகர வளர்ச்சி ஆணைய முறைகேட்டில் தொடர்பு கொண்டவர், எவ்வளவு பெரியவராக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, காங்கிரஸ் எம்.எல்.சி., ஹரிபிரசாத் வலியுறுத்தினார். இதன் மூலம் முதல்வர் சித்தராமையாவுக்கு அவர் மறைமுகமாக நெருக்கடி கொடுத்துள்ளார்.
பெங்களூரு : மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில், மனைகள் வழங்கியதில் ஊழல் நடந்திருப்பது, சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. பலருக்கும் சட்டவிரோதமாக மனை வழங்கியதாக கூறப்பட்டது. முதல்வர் சித்தராமையாவின் மனைவி பெயரில் மனைகள் பெறப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வலுவான அஸ்திரம்
இவரது சொந்த மாவட்டத்தில், இத்தகைய முறைகேடு நடந்திருப்பது, எதிர்க்கட்சியினருக்கு வலுவான அஸ்திரத்தை கொடுத்துள்ளது. இவர்களை விட, காங்கிரசில் உள்ள சித்தராமையாவின் எதிரிகள், அதிக குஷி அடைந்துள்ளனர்.
முதல்வருக்கு அனைத்துதரப்பில் இருந்தும் நெருக்கடி வருவதை ஆர்வத்துடன் வேடிக்கை பார்க்கின்றனர். முறைகேட்டில் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காங்கிரஸ் எம்.எல்.சி., ஹரிபிரசாத் மறைமுகமாக வலியுறுத்தியுள்ளார்.
கட்சியின் மூத்த தலைவர்களை சித்தராமையா மதிப்பதில்லை என, பல ஆண்டுகளாகவே காங்கிரசில் புகைச்சல் உள்ளது. அவர் மீது அதிருப்தியில் உள்ள தலைவர்களில், ஹரிபிரசாத்தும் ஒருவர். இவருக்கும், சித்தராமையாவுக்கும் ஏழாம் பொருத்தம்.
ஆரம்பத்தில் இருந்தே, இவருக்கும் சித்தராமையாவுக்கும் நல்லுறவு இருந்தது இல்லை. தன்னை அமைச்சரவையில் சேர்க்கவில்லை என்ற வருத்தம் இவருக்கு உள்ளது.
பகிரங்க விமர்சனம்
வாய்ப்பு கிடைக்கும்போது, சித்தராமையாவை பகிரங்கமாக விமர்சித்து வந்தார். அது மட்டுமின்றி, மாநிலத்தில் முதல்வரை மாற்றும் சக்தி தனக்கு உள்ளது என, பல முறை சவால் விடுத்தார்.
கடந்தாண்டு பெங்களூரில், பிரம்மாண்ட அளவில் ஈடிகர் மாநாடு நடந்தது. தன் தலைமையில் மாநாடு நடக்கும் என, ஹரிபிரசாத் எதிர்பார்த்தார். ஆனால் மது பங்காரப்பா தலைமை ஏற்றார்.
இதன் பின்னணியில், சித்தராமையா இருந்ததாக கூறப்பட்டது. இது ஹரிபிரசாத்தின் கோபத்தை அதிகமாக்கியது. இதனால், மாநாட்டில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், சித்தராமையா மீது எழுந்துள்ள கடுமையான குற்றச்சாட்டை, பயன்படுத்திக் கொள்கிறார் ஹரி பிரசாத். இவருக்கு ஆதரவாக சில அமைச்சர்கள் நின்றுள்ளனர்.
பெங்களூரில் நேற்று ஹரிபிரசாத் அளித்த பேட்டி:
மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில், முறைகேடு நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில் தொடர்பு கொண்டவர்கள் எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வரும், துணை முதல்வரும் மிகவும் பெரிய தலைவர்கள். அவர்களுக்கு நான் ஆலோசனை கூற முடியுமா?
'மூடா' மற்றும் வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடுகள் குறித்து குரல் எழுப்ப வேண்டும். நில முறைகேடு குறித்து பேச துவங்கினால், அதிலிருந்து வெளியே வர முடியாது. பெரும்பாலான அரசியல்வாதிகள் நில மோசடிக்கு விதிவிலக்கு அல்ல. ஏதாவது ஒரு வகையில் தொடர்பு கொண்டுள்ளனர். 'மூடா' முறைகேட்டை மூடி மறைக்க முடியாது.
மைசூரில் மட்டுமின்றி, பெங்களூரிலும் நில மறு அறிவிப்பு நடந்துள்ளது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும். பெரியவர்களுக்கு ஒரு சட்டம், ஏழைகளுக்கு ஒரு சட்டம் உள்ளது. அனைவருக்கும் ஒரே சட்டம் இருக்க வேண்டும். எஸ்.சி., - எஸ்.டி., சிறுபான்மையினர் காங்கிரசுக்கு அதிகம் ஓட்டுப் போட்டுள்ளனர். இவர்களுக்கு அநியாயம் நடக்கக் கூடாது.
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில், யார் தவறு செய்திருந்தாலும் தண்டிக்க வேண்டும். இந்த விஷயத்தில் எதிர்க்கட்சியினர் விட்டாலும், நாங்கள் விடமாட்டோம். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு அநியாயம் நடக்க கூடாது.
ஆழமான விசாரணை
வால்மீகி மேம்பாட்டு ஆணையம் வளர்ச்சி அடைவது, கஷ்டமாகிவிடும். சமுதாயத்தினருக்கு அநியாயம் நடப்பதை சகிக்க மாட்டோம். முறைகேடு குறித்து ஆழமாக விசாரணை நடக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஹரிபிரசாத் மறைமுகமாக கூறியது, கட்சியில் சலசலப்பைஏற்படுத்தியுள்ளது.
போலீசில் புகார்
மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, முதல்வர் சித்தராமையா மீது, மைசூரின் விஜயநகர் போலீஸ் நிலையத்தில், சமூக ஆர்வலர் ஸ்னேஹமயி கிருஷ்ணா, நேற்று புகார் அளித்துள்ளார். இந்த முறைகேட்டில் மாவட்ட கலெக்டர், தாசில்தார், துணை பதிவு அதிகாரி, 'மூடா' அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளதாக புகாரில் கூறியுள்ளார்.
இதுகுறித்து, கவர்னர், மாநில தலைமை செயலர், வருவாய்த்துறை முதன்மை செயலருக்கும் கிருஷ்ணா கடிதம் எழுதியுள்ளார்.
மைசூரில் நேற்று பா.ஜ., -- எம்.எல்.சி., விஸ்வநாத் அளித்த பேட்டி:
மஹாராஜா உருவாக்கிய மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தின் மானத்தை, முதல்வர் சித்தராமையா உட்பட அனைவரும் சேர்ந்து 'ஏலம்' போட்டுள்ளனர். அஹிந்தா பெயரில் ஓட்டு வாங்கி, இப்போது அந்த சமுதாயத்தினருக்கு 'தொப்பி' போடும் வேலையை சித்தராமையா செய்துள்ளார்.
'மூடா'வில் நடந்துள்ள முறைகேட்டை, அவ்வளவு எளிதில் மூடி மறைக்க முடியாது. நான் சட்டவிரோதமாக என் மனைவி பெயரில், வீட்டுமனை பெற்றதாக 'மூடா' தலைவர் மரிகவுடா குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆனால் நாங்கள் சட்டத்துக்கு உட்பட்டே, வீட்டுமனை பெற்றுள்ளோம். இவ்விஷயத்தில் வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது என, அமைச்சர்களுக்கும், 'மூடா' அதிகாரிகளுக்கும் முதல்வர் உத்தரவிட வேண்டும்.
என் மனைவிக்கு தேவனுார் மூன்றாவது ஸ்டேஜில், அளிக்கப்பட்ட வீட்டுமனை அருகில் வருணா கால்வாய் பாய்கிறது. அங்கு வீடு கட்ட முடியாது. எனவே, மாற்று வீட்டுமனை கொடுத்தனர். என் மீது குற்றஞ்சாட்டும் 'மூடா' தலைவர், ஒரு மூடன். அனைவரும் சேர்ந்து முறைகேட்டை மூடி மறைக்க முயற்சிக்கின்றனர்.
சி.ஏ., வீட்டுமனைகள் மற்றும் பூங்காக்கள், மூடாவின் சொத்துகள். இவற்றையும் சிலர் விற்றுள்ளனர். எம்.எல்.சி., மஞ்சேகவுடா, தன் லே - அவுட்டில் பூங்கா இடத்தை வீட்டுமனையாக மாற்றி, விற்பனை செய்துள்ளார். இவர் மீது 'மூடா' தலைவர் மரிகவுடா நடவடிக்கை எடுப்பாரா? நான் நேர்மையுடன் வாழ்கிறேன்.
மூடாவில் 10,000 கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடந்துள்ளது. இது பற்றி போலீசாரால் விசாரணை நடத்த முடியாது. சி.பி.ஐ.,யால் மட்டுமே, விசாரணை நடத்த முடியும். எனவே சி.பி.ஐ.,யிடம் விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.