அமிர்தசரஸ் தாக்குதல் குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
அமிர்தசரஸ் தாக்குதல் குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
அமிர்தசரஸ் தாக்குதல் குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
ADDED : மார் 18, 2025 01:40 AM

சண்டிகர்: பஞ்சாபில், அமிர்தசரசில் உள்ள கோவிலுக்கு வெளியே குண்டு வெடித்த சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் நபர், போலீசாருடன் நடந்த என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தின் கந்த்வாலா என்ற பகுதியில், தாக்குர் துவாரா கோவில் உள்ளது. கடந்த 15ம் தேதி நள்ளிரவு முகமூடி அணிந்து, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், கோவில் மீது கையெறி குண்டுகளை வீசினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், கோவிலின் சுற்றுச்சுவர் சேதமடைந்தது.
'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், தாக்குதலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம், அமிர்தசரசின் ராஜசான்சி என்ற பகுதியைச் சேர்ந்த வரிந்தர் சிங் என்பவருக்கு சொந்தமானது என்பதை கண்டுபிடித்தனர்.
அவரிடம் விசாரித்த போது, குர்சிதக் சிங், விஷால் ஆகியோர் தான், கோவில் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறினார். இதையடுத்து இருவரையும் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், ராஜசான்சி பகுதியில் நேற்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், வாகனத்தை விட்டு விட்டு, போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பியோடினர்.
இந்த தாக்குதலில், தலைமை காவலர் குர்பிரீத் சிங்கின் இடது கையில் ஒரு குண்டு பாய்ந்தது. இன்ஸ்பெக்டர் அமோலக் சிங்கின் இடது கையில் ஒரு குண்டு பாய்ந்தது.
தற்காப்புக்காக போலீசார் சுட்டதில், ஒருவர் காயமடைந்தார். விசாரணையில், காயமடைந்த நபர் குர்சிதக் சிங் என்பது தெரிய வந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தப்பியோடிய விஷாலை போலீசார் தேடி வருகின்றனர்.
தாக்குர் துவாரா கோவில் மீது நடந்த தாக்குதலின் பின்னணியில், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கு தொடர்பு இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.