பா.ஜ.,வின் தவறான கொள்கைகளால் ராணுவ வீரர்கள் பாதிப்பு: ராகுல்
பா.ஜ.,வின் தவறான கொள்கைகளால் ராணுவ வீரர்கள் பாதிப்பு: ராகுல்
பா.ஜ.,வின் தவறான கொள்கைகளால் ராணுவ வீரர்கள் பாதிப்பு: ராகுல்
ADDED : ஜூலை 16, 2024 11:57 AM

புதுடில்லி: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 4 பேர் வீரமரணம் அடைந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் ராகுல், பா.ஜ.,வின் தவறான கொள்கைகளால் நமது ராணுவ வீரர்களும், அவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
கவலை
இது தொடர்பாக ‛எக்ஸ் ' சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: இன்று, காஷ்மீரில் மற்றொரு பயங்கரவாத தாக்குதலில் நமது வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துவதுடன், அவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன்.
இதுபோன்று துயர சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடப்பது மிகுந்த கவலையையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. தொடர்ந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது காஷ்மீரில் நிலவும் மோசமான சூழ்நிலையை எடுத்து காட்டுகிறது. பா.ஜ.,வின் தவறான கொள்கைகளால் நமது ராணுவ வீரர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பாதுகாப்பு குறைபாடுகளுக்கு அரசு முழு பொறுப்பு ஏற்றுக் கொள்வதுடன், நாட்டிற்கும், வீரர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒவ்வொரு குடிமகனும் எதிர்பார்க்கின்றனர். இந்த சோகமான நேரத்தில், பயங்கரவாதத்திற்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாக நிற்கின்றனர். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.
மாறவில்லை
காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் என்கவுன்டரில் தைரியமிக்க வீரர்கள் 4 பேர் வீரமரணம் அடைந்தது வேதனை அளிக்கிறது. பாரத மாதாவிற்காக உயிர்தியாகம் செய்த நமது தைரியமிக்க வீரர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக நமது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். கோழைத்தனமான பயங்கரவாதிகள் நடத்தும் இந்த தாக்குதலுக்கு எதிராக வலுவான மற்றும் வலிமையான கண்டனங்கள் மட்டும் போதாது.
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அனைத்தையும் வழக்கமான நடவடிக்கையாக மோடி அரசு பார்ப்பதால் எதுவும் மாறவில்லை. தாக்குதலால் காஷ்மீரில் பதற்றம் ஏற்பட்டுள்ளதை அவர்கள் அறிய வேண்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கார்கே கூறியுள்ளார்.