பா.ஜ., - எம்.எல்.ஏ., எத்னால் சர்க்கரை ஆலையை மூட உத்தரவு
பா.ஜ., - எம்.எல்.ஏ., எத்னால் சர்க்கரை ஆலையை மூட உத்தரவு
பா.ஜ., - எம்.எல்.ஏ., எத்னால் சர்க்கரை ஆலையை மூட உத்தரவு
ADDED : ஜன 27, 2024 11:14 PM

கலபுரகி: விதிகளை மீறி செயல்படுவதாகக் கூறி, பா.ஜ., - எம்.எல்.ஏ., எத்னாலின் சர்க்கரை ஆலையை மூட, கர்நாடகா மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டு உள்ளது.
பீதரில் சில நாட்களுக்கு முன்பு, ஒரு ஆலையில் விஷ வாயு தாக்கி, இரு தொழிலாளர்கள் இறந்தனர்.
இதையடுத்து கர்நாடகா சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். விதிகளை மீறி செயல்படும், தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில், விஜயபுரா தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னாலுக்கு சொந்தமான, கலபுரகி சிஞ்சோலியில் உள்ள சர்க்கரை ஆலை, விதிகளை மீறி செயல்பட்டது தெரிந்தது.
மின்வினியோகம் நிறுத்தம்
அதாவது சர்க்கரை ஆலையில் கரும்புகளை அரைத்த பின்னர், கழிவுகளை சுத்திகரிப்பு செய்யாமல், தண்ணீர் செல்லும் ஓடைகளில் விட்டதும், இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டது தெரிந்தது.
இதையடுத்து, அந்த சர்க்கரை ஆலையை மூடும்படி, கலபுரகி கலெக்டருக்கு, கர்நாடகா மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியது. அத்துடன் அந்த சர்க்கரை ஆலைக்கு வழங்கப்படும், மின் வினியோகத்தை நிறுத்தும்படியும், மின்சாரத் துறைக்கு உத்தரவிட்டது.
அபராதம்
இதுகுறித்து பசனகவுடா பாட்டீல் தன் எக்ஸ் பக்கத்தில், 'என் சர்க்கரை தொழிற்சாலையை மூட, அரசு உத்தரவிட்டு இருப்பது, பழிவாங்கும் நடவடிக்கை.
கரும்பு விவசாயிகள் பயன்பெறும் வகையில், சிஞ்சோலியில் கரும்பு தொழிற்சாலை துவங்கினேன். அரசு முடிவுக்கு எதிராக, சட்ட போராட்டம் நடத்துவேன். கண்டிப்பாக தொழிற்சாலை மறுபடியும் திறக்கப்படும்' என்று கூறியுள்ளார்.
எத்னாலின் குற்றச்சாட்டை சுற்றுச்சூழல் அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே மறுத்து உள்ளார். ''விதிகளை மீறும் தொழிற்சாலைகள் குறித்து, அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டு இருந்தேன்.
எத்னாலுக்கு சொந்தமான சர்க்கரை தொழிற்சாலையும், விதிகளை மீறி இருப்பதால், நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் துறை, எத்னாலின் சர்க்கரை ஆலைக்கு 1.50 கோடி ரூபாய், அபராதம் விதித்து உள்ளது.
அபராதத்தை அவர் செலுத்தி உள்ளார். அதன்பின்னரும் அவர் விதிகளை பின்பற்றவில்லை,'' என, அமைச்சர் கூறியுள்ளார்.