திருமணத்துக்கு வற்புறுத்திய காதலியை கொன்று புதைத்த காதலன் சிக்கினார்: 6 மாதத்துக்கு பின் காதலன் கைது
திருமணத்துக்கு வற்புறுத்திய காதலியை கொன்று புதைத்த காதலன் சிக்கினார்: 6 மாதத்துக்கு பின் காதலன் கைது
திருமணத்துக்கு வற்புறுத்திய காதலியை கொன்று புதைத்த காதலன் சிக்கினார்: 6 மாதத்துக்கு பின் காதலன் கைது
ADDED : ஜூன் 16, 2025 01:34 AM

கதக்: கர்நாடகாவில், திருமணத்திற்கு வற்புறுத்தியதால் காதலியை கழுத்தை நெரித்துக் கொன்று, உடலை புதைத்த காதலன் ஆறு மாதங்களுக்கு பின் கைது செய்யப்பட்டு உள்ளார்.
கர்நாடக மாநிலம், கதக் அருகே நாராயணபுரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சதீஷ் ஹிரேமத், 27 மற்றும் மதுஸ்ரீ அங்காடி, 24. இருவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்தனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இவர்களின் காதல் விவகாரம், மதுஸ்ரீ குடும்பத்தினருக்கு தெரிந்தது. காதலை கைவிடும்படி கூறினர். மதுஸ்ரீ கேட்கவில்லை. இதனால், கதக்கில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி உறவினர் வீட்டில் இருந்து, மதுஸ்ரீ வெளியேறினார். பின், அவர் எங்கு சென்றார் என்று தகவல் இல்லை. அவரது மொபைல்போனும், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டது. மதுஸ்ரீ குடும்பத்தினர் அளித்த புகாரில், காதலன் சதீஷை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
'மதுஸ்ரீ என்னிடம் வந்தது உண்மை தான். ஆனால், அவருக்கு புத்திமதி கூறி, வீட்டிற்கு அனுப்பி வைத்தேன். அதன்பின் அவர் எங்கு சென்றார் என தெரியாது' என, சதீஷ் கூறி உள்ளார். அவரை போலீசார் விட்டுவிட்டனர்.
பெட்ரோல் பங்க்கில் வேலை செய்த சதீஷ், எப்போதும் போல் வேலைக்கு சென்று வந்தார். மதுஸ்ரீயின் மொபைல் நம்பரை வைத்து, கடைசியாக அவரது மொபைல் டவர் எங்கு காண்பித்தது என்று, போலீசார் ஆய்வு செய்தனர். சதீஷ் இறக்கி விட்டதாக கூறிய இடத்திற்கு, மதுஸ்ரீ செல்லவே இல்லை என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதனால் நேற்று முன்தினம் சதீஷை பிடித்து மீண்டும் விசாரித்தனர். இதில், மதுஸ்ரீயை கொன்றதை ஒப்புக் கொண்டார். அவர் கைது செய்யப்பட்டார்.
திருமணத்துக்கு வலியுறுத்தியதால், மதுஸ்ரீயைக் கொன்று, நாராயணபுரா கிராமத்தில் உள்ள தன் பண்ணை வீட்டில் புதைத்ததாக சதீஷ் கூறினார்.
அந்த இடத்திற்கு சதீஷை நேற்று போலீசார் அழைத்து சென்றனர். உடல் புதைக்கப்பட்ட இடத்தில், சில எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை டி.என்.ஏ., சோதனைக்கு போலீசார் அனுப்பியுள்ளனர்.