கிரிக்கெட் வீரர் கோலிக்கு சொந்தமான 'பப்' மீது வழக்கு
கிரிக்கெட் வீரர் கோலிக்கு சொந்தமான 'பப்' மீது வழக்கு
கிரிக்கெட் வீரர் கோலிக்கு சொந்தமான 'பப்' மீது வழக்கு
UPDATED : ஜூலை 10, 2024 01:20 PM
ADDED : ஜூலை 10, 2024 07:52 AM

பெங்களூரு: அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் நேரம் திறக்கப்பட்டு இருந்ததால், கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் 'பப்' மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி 2008ல் துவங்கப்பட்டதிலிருந்து, பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். விராட் கோலிக்கு பெங்களூரில் ரசிகர்கள் அதிகம். அவரும் பல முறை தனக்கும், பெங்களூருவுக்கும் பிரிக்க முடியாத பந்தம் இருப்பதாக கூறியுள்ளார்.
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தை ஒட்டியுள்ள, கஸ்துாரிபா சாலையில் விராட் கோலிக்கு சொந்தமான, 'ஒன்8 கம்யூன்' என்ற பெயரில் பப் உள்ளது. பெங்களூரில் நள்ளிரவு தாண்டி 1:00 மணிக்கு மேல் பப் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6ம் தேதி இரவு, சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தை சுற்றியுள்ள சில பப்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட, கூடுதல் நேரம் திறக்கப்பட்டு இருப்பதாகவும், அங்கு அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பப்படுவதாகவும், கப்பன் பார்க் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் ரோந்து சென்றனர். விராட் கோலிக்கு சொந்தமான பப் உட்பட நான்கு பப்கள் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் நேரம் திறந்திருந்தது தெரிந்தது. சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.