நாடு கடத்தலை எதிர்த்த வழக்கு; ஐகோர்ட்டை நாடும்படி உத்தரவு
நாடு கடத்தலை எதிர்த்த வழக்கு; ஐகோர்ட்டை நாடும்படி உத்தரவு
நாடு கடத்தலை எதிர்த்த வழக்கு; ஐகோர்ட்டை நாடும்படி உத்தரவு

புதுடில்லி: அசாமில், நீதிமன்ற உத்தரவை மீறி வெளிநாட்டினர் சட்ட விரோதமாக நாடு கடத்தப்படுவதாகவும், அதற்கு தடை விதிக்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு எந்த ஆவணங்களுமின்றி சட்ட விரோதமாக வசித்து வரும் வெளிநாட்டினரை கண்டறிந்து, அம்மாநில அரசு நாடு கடத்தி வருகிறது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தின் அனுமதி இல்லாமல், எந்தவொரு நபரையும் நாடு கடத்தக்கூடாது. குடியுரிமையை நிரூபிக்க வாய்ப்பு வழங்க வேண்டும்' என, பிப்., 4ல் உத்தரவிட்டது.
இந்நிலையில், அசாம் அரசின் நாடு கடத்தும் நடவடிக்கைக்கு தடை விதிக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில், அனைத்து சிறுபான்மை மாணவர் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 'உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, நாடு கடத்தும் நடவடிக்கையை அசாம் அரசு தொடர்ந்து செய்கிறது. குடியுரிமையை நிரூபிக்க சம்பந்தப்பட்ட நபருக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இதற்கு தடை விதிக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கரோல், சதீஷ் சந்திர சர்மா அமர்வு, இது தொடர்பாக குவஹாத்தி உயர் நீதிமன்றத்தை நாடும்படி மனுதாரரை அறிவுறுத்தியது. இதன்பின், நீதிபதிகளின் அனுமதியுடன் மனுவை மனுதாரரின் வழக்கறிஞர் திரும்ப பெற்றார்.