பொது நிதியில் உயர் அதிகாரிகளுக்கு தீபாவளி பரிசு வழங்க மத்திய அரசு தடை
பொது நிதியில் உயர் அதிகாரிகளுக்கு தீபாவளி பரிசு வழங்க மத்திய அரசு தடை
பொது நிதியில் உயர் அதிகாரிகளுக்கு தீபாவளி பரிசு வழங்க மத்திய அரசு தடை
ADDED : செப் 24, 2025 04:08 AM

புதுடில்லி: தீபாவளி, நவராத்திரி போன்ற பண்டிகை காலங்களில் அமைச்சகங்கள் அல்லது அரசு துறைகளுக்கு இடையே பரிசு பொருட்களை பரிமாறிக்கொள்வது வழக்கம்.
இது மட்டுமின்றி, அரசு உயர் அதிகாரிகளுக்கும் பொது நிதியில் இருந்து பண்டிகை காலங்களில் பரிசுகள் வாங்கிக் கொடுப்பது நடைமுறையில் உள்ளது.
அடுத்த மாதம் 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அனைத்து மத்திய அமைச்சகங்கள், ஊழியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை மத்திய நிதியமைச்சகம் கடந்த 19ல் அனுப்பியுள்ளது.
இது குறித்து மத்திய நிதியமைச்சகத்தின் செலவினங்கள் துறை இணை செயலர் பி.கே.சிங் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
பொது நிதியை பயன் படுத்தி, தீபாவளி அல்லது பண்டிகை காலங்களில் அமைச்சகங்கள் அல்லது துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் இடையே பரிசுப்பொருட்களை பரிமாறக்கூடாது.
இதே போல் துறையின் உயர் அதிகாரிகளுக்கு பரிசு வழங்கவோ, பண்டிகை தொடர்பான செலவினங்களையோ பொதுநிதியில் இருந்து செலவிடக் கூடாது. தேவையற்ற செல வினங்களை குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த திட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.