Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/சுரங்கம் அமைத்து வட மாநிலங்களுக்கு சிந்து நதிநீர்: மத்திய அரசு புது திட்டம்!

சுரங்கம் அமைத்து வட மாநிலங்களுக்கு சிந்து நதிநீர்: மத்திய அரசு புது திட்டம்!

சுரங்கம் அமைத்து வட மாநிலங்களுக்கு சிந்து நதிநீர்: மத்திய அரசு புது திட்டம்!

சுரங்கம் அமைத்து வட மாநிலங்களுக்கு சிந்து நதிநீர்: மத்திய அரசு புது திட்டம்!

ADDED : செப் 25, 2025 06:31 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: சிந்து நதிநீரை, சுரங்கம் அமைத்து வட மாநிலங்கள் பலன்பெறும் வகையில், இமயமலையில் உருவாகும் பியாஸ் நதியுடன் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

நம் அண்டை நாடான திபெத் மற்றும் இமயமலை அடிவாரத்தில் உள்ள ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இருந்து உருவாகும் ஆறு நதிகள், சிந்து நதி தொகுப்பாக கூறப்படுகிறது. இந்த நதிகள், இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வழியாக பாய்ந்து, அரபிக் கடலில் கலக்கின்றன. சுதந்திரத்துக்குப் பின் ஏற்பட்ட பிரிவினையைத் தொடர்ந்து, இந்த நதிகளை பயன்படுத்துவது தொடர்பாக, நம் அண்டை நாடான பாகிஸ்தானுடன் சர்ச்சை ஏற்பட்டது.

1960ல், உலக வங்கியின் முன்னிலையில், இந்தியா, பாகிஸ்தான் இடையே சிந்து நதி நீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. உலக அளவில் மிகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட ஒப்பந்தமாக இது இருந்தது.

இந்த ஒப்பந்தத்தின்படி ராவி, பியாஸ், சட்லஜ் ஆகிய கிழக்கு நதிகள், இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும். அதே நேரத்தில், சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மேற்கு நதிகள் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த ஆறு நதிகளில் இருந்து கிடைக்கும் 21,800 கோடி கன அடி நீரில், 30 சதவீதம் மட்டுமே இந்தியாவுக்கு கிடைக்கிறது. மீதமுள்ள, 70 சதவீதம் பாகிஸ்தானுக்கு கிடைத்து வந்தது.

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் தெரிவித்த மிரட்டலையும், எதிர்ப்பையும் இந்தியா நிராகரித்துவிட்டது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் தடுக்கப்பட்டால் மட்டுமே இந்த ஒப்பந்தம் குறித்து மீண்டும் பரிசீலனை செய்ய முடியும் என உறுதிபடத் தெரிவித்துவிட்டது.

ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் கிடைக்கும் உபரி நீரை உபயோகமாக பயன்படுத்தி கொள்வதற்கும், இந்தியாவில் வேறு திட்டங்களுக்கும் பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

இந்நிலையில் வட மாநிலங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சிந்து நதியில் உற்பத்தி ஆகும் நீரை, 14 கிமி தூரத்துக்கு சுரங்கம் அமைத்து பியாஸ் நதிக்கு கொண்டு செல்வது குறித்து மத்திய அரசு திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை 2029ம் ஆண்டுக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், இது தொடர்பாக மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி உள்ளனர். அப்போது இந்த திட்டத்துக்கான விரிவான அறிக்கையை தயார் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்த விரிவான அறிக்கையை தயாரிக்கும் பணியில் எல் அண்ட் டி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அடுத்தாண்டிற்குள் விரிவான திட்டம் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகே இந்தத் திட்டம் குறித்து மத்திய அரசு இறுதி முடிவெடுக்க உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us