மாஸ்டர் பிளானை விரைவில் வெளியிட கவர்னருக்கு முதல்வர் வேண்டுகோள்
மாஸ்டர் பிளானை விரைவில் வெளியிட கவர்னருக்கு முதல்வர் வேண்டுகோள்
மாஸ்டர் பிளானை விரைவில் வெளியிட கவர்னருக்கு முதல்வர் வேண்டுகோள்
ADDED : செப் 25, 2025 02:40 AM

புதுடில்லி,:“வளர்ச்சி அடைந்து வரும் டில்லி மாநகரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய 'மாஸ்டர் பிளான் - 2041' திட்டத்தை விரைந்து வெளியிட வேண்டும்,”என, துணைநிலை கவர்னர் சக்சேனாவுக்கு, முதல்வர் ரேகா குப்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
'கிராமோதயா அபியான்' திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை துணைநிலை கவர்னர் சக்சேனா, முதல்வர் ரேகா குப்தா ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர்.
அப்போது, முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது:
100 ஆண்டுகள் டில்லி மாநகரின் வளர்ச்சிக்கான புதிய மாஸ்டர் பிளான், தற்போதுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி அடுத்த 100 ஆண்டுகளுக்கும் பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும்.
புதிய மாஸ்டர் பிளானை தயாரித்து வரும் டில்லி மேம்பாட்டு ஆணையம் அதை விரைவில் வெளியிட, ஆணைய தலைவரும், துணைநிலை கவர்னருமான சக்சேனா நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த பிப்ரவரியில் முதல்வர் பொறுப்பை ஏற்ற பின், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாகத் தயாரிக்கப்பட்டு வரும் மாஸ்டர் பிளான் 2041-ன் வரைவு குறித்து விசாரித்தேன்.
ஆனால், அதிகாரிகள் காட்டிய வரைவு படத்தைப் பார்த்து எனக்கு எதுவும் புரியவில்லை. மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒரு உறுதியான மாஸ்டர் பிளானை உருவாக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
ரூ.960 கோடி டில்லி மேம்பாட்டு ஆணைய தலைவரும், துணைநிலை கவர்னருமான சக்சேனா பேசிய தாவது:
டில்லிக்கான மாஸ்டர் பிளான் தயாரிப்பில் டில்லி மேம்பாட்டு ஆணையம் முழு கவனம் செலுத்தி வருகிறது. அதை விரைவில் இறுதி செய்து வெளியிட பணிகள் துரிதப்படுத்தப்படும்.
டில்லி கிராமோதயா அபியான் 2023ம் ஆண்டு துவக்கப்பட்டது. பல ஆண்டுகளாக செல விடப்படாமல் டில்லி அரசிடம் இருந்த 960 கோடி ரூபாய் நிதி, இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்காக டில்லி மேம்பாட்டு ஆணையத்துக்கு மாற்றப்பட்டது.
மொத்தம் 960 கோடி ரூபாயில் 760 கோடி ரூபாய்க்கு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டன. மேலும், 13 கோடி ரூபாய் செலவில் 50 கிராமங்களில் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
நாடு வளர்ச்சியடைய வேண்டுமென்றால், நகரம் மற்றும் லுாடியன்ஸ் மண்டலத்தை மட்டும் மேம்படுத்தினால் போதாது. கிராமங்களின் வளர்ச்சியும் மிகவும் அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.