மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது: மத்திய அமைச்சரிடம் துரைமுருகன் வலியுறுத்தல்
மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது: மத்திய அமைச்சரிடம் துரைமுருகன் வலியுறுத்தல்
மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது: மத்திய அமைச்சரிடம் துரைமுருகன் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 25, 2024 05:00 PM

புதுடில்லி: காவிரி நீர், மேகதாது அணை விவகாரம் குறித்து மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டில்லியில் சந்தித்தார். அப்போது மேகதாது அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினார்.
தமிழகம் - கர்நாடகா இடையே காவிரி ஆற்றில் தண்ணீரை பங்கிட்டுக்கொள்வது தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. 32வது காவிரி மேலாண்மை கூட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான 45 டி.எம்.சி தண்ணீரை கர்நாடக அரசு தர வேண்டும் என நீர்வளத்துறை செயலாளர் மணிவாசன் வலியுறுத்தினார். இந்நிலையில், இந்தக் கோரிக்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அமைச்சர் துரைமுருகன் டில்லி சென்றார்.
மாலையில், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை சந்தித்துப் பேசிய அமைச்சர் துரைமுருகன், காவிரி நீர் பங்கீடு குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சித்து வரும் நிலையில், அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது எனவும் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். இச்சந்திப்பின்போது, தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் மற்றும் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.