பாரா கல்லுாரி மாணவி தற்கொலை
ஷிவமொகா கும்சியில் வசித்தவர் முஸ்கான், 20, என்ற பெண், தனியார் கல்லுாரியில், பாரா மெடிக்கல் படித்து வந்தார். இவருக்கும், தீர்த்தஹள்ளியை சேர்ந்த 30 வயது வாலிபருக்கும், சமீபத்தில் திருமண நிச்சயம் செய்யப்பட்டது. மாப்பிள்ளைக்கு தன்னை விட வயது அதிகமாக இருப்பதால், திருமணம் வேண்டாம் என்று முஸ்கான், பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. மனம் உடைந்தவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிலிண்டர் வெடித்து காயம்
கலபுரகி ஜீவர்கி இட்டாகா கிராமத்தில் வசிப்பவர் அஞ்சனா, 30. இவரது மகன் கார்த்திக், 4, மகள்கள் குஷி, 3, கீர்த்தனா, 2. நேற்று காலை சமையல் செய்ய, காஸ் அடுப்பை அஞ்சனா பற்ற வைத்தார். அப்போது சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. அஞ்சனாவும், அவரது பிள்ளைகளும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மாணவர்கள் மோதல்
துமகூரு திப்டூரில் நேற்று காலை கல்லுாரி மாணவர்கள், இரு கும்பலாக பிரிந்து நடுரோட்டில் மோதிக் கொண்டனர். இதை சிலர் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினர். அந்த வீடியோ, திப்டூர் போலீசார் கவனத்திற்கும் சென்றது. மோதலில் ஈடுபட்ட மாணவர்கள், அவர்களின் பெற்றோர் போலீஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டனர். தங்களுடன் படிக்கும் மாணவியருடன், யார் பேசுவது என்பதில் ஏற்பட்ட தகராறில், மாணவர்கள் மோதியது தெரிந்தது. அனைவரிடமும் போலீசார் எழுதி வாங்கி, எச்சரித்து அனுப்பினர்.
இரு பெண்கள் கைது
உத்தர கன்னடா முண்டுகோடு போலீசார், தங்களுக்கு கிடைத்த தகவலின்படி, பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பயணியரிடம் நகை, பணத்தை திருடும் 2 பெண்களை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ஷிவமொகா பத்ராவதியின் சாந்தி, 31, மீனாட்சி, 32, என்பது தெரிந்தது. இவர்களிடம் இருந்து 6.20 லட்சம் ரூபாய், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.