Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ 97 தேஜஸ் போர் விமானங்கள் ரூ.62,370 கோடிக்கு வாங்க முடிவு

97 தேஜஸ் போர் விமானங்கள் ரூ.62,370 கோடிக்கு வாங்க முடிவு

97 தேஜஸ் போர் விமானங்கள் ரூ.62,370 கோடிக்கு வாங்க முடிவு

97 தேஜஸ் போர் விமானங்கள் ரூ.62,370 கோடிக்கு வாங்க முடிவு

ADDED : செப் 26, 2025 12:27 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி: நம் விமானப்படைக்காக, 62,370 கோடி ரூபாயில், 97 தேஜஸ் ரக போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் நம் ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

'ஆப்பரேஷன் சிந்துார்' தாக்குதலுக்கு பின், ராணுவ பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக, அமெரிக்காவிடம் இருந்து, 'பி - 8ஐ' ரக கடற்படை விமானத்தை வாங்குவதற்கான பேச்சுகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.

உள்நாட்டு உற்பத்தி

அந்த வகையில், உள்நாட்டில் போர் விமானங்களை தயாரித்து வரும் கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த எச்.ஏ.எல்., எனப்படும், 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்' நிறுவனத்திடம் இருந்து, 97 தேஜஸ் ரக போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக அந்நிறுவனத்துடன், 62,370 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தில், நம் ராணுவ அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.

அதன்படி, 2027 - 28ம் நிதியாண்டு முதல் நம் ராணுவத்துக்கு போர் விமானங்கள் வழங்கும் பணியை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் துவங்கும்.

அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள், 97 போர் விமானங்களை நம் விமானப்படைக்கு அந்நிறுவனம் தயாரித்து வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வகை போர் விமானங்களில், 64 சதவீத பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாக இருக்கும். இதனால், 105 உள்நாட்டு நிறுவனங்களுக்கு நேரடி பணி வாய்ப்புகள் கிடைக்கும்.

தவிர, 11,750 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இந்த வகை போர் விமானங்கள் மூலம் நம் விமானப்படையின் இயக்கத்திறன் அதிகரிக்கும் என, நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

ராணுவ பலம்

'சுயசார்பு இந்தியா' என்ற கொள்கைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து உள்ளது.

அதன்படி ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து, 97 இலகு ரக போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த போர் விமானங்கள் மூலம், நம் விமானப்படையின் இயக்கத்திறன் அதிகரிக்கும். ராணுவ பலமும் வலுவடையும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் தேஜஸ் ரக விமானங்கள் மீது மத்திய அரசும், ராணுவமும் வைத்திருக்கும் நம்பிக்கை இந்த ஒப்பந்தம் மூலம் பிரதிபலிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us