Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த இது சரியான நேரம்: டில்லி ஐகோர்ட்

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த இது சரியான நேரம்: டில்லி ஐகோர்ட்

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த இது சரியான நேரம்: டில்லி ஐகோர்ட்

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த இது சரியான நேரம்: டில்லி ஐகோர்ட்

UPDATED : செப் 27, 2025 12:09 AMADDED : செப் 26, 2025 05:23 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி : குழந்தை திருமணங்கள் தொடர்பான சட்டச் சிக்கல்கள் மற்றும் குற்றவியல் அம்சங்களில் முஸ்லிம் மற்றும் இந்திய தண்டனை சட்டங்களுக்குள் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டிய டில்லி உயர் நீதிமன்றம், 'பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த இது சரியான நேரம்' என கருத்து தெரிவித்துள்ளது.

திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை, தத்தெடுத்தல் ஆகியவற்றில் ஒவ்வொரு மதத்தினரும் வெவ்வேறு வழிமுறைகளை பின்பற்றி வரும் நிலையில், அவற்றில் அனைத்து மதத்தினரும் ஒரே வழிமுறையை பின்பற்ற, பொது சிவில் சட்டம் வழி வகை செய்கிறது.



உத்தரவு

இதை, நாடு முழுதும் அமல்படுத்துவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம், கடந்த ஜனவரி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் 14 வயதாக இருக்கும்போது, அவரின் வளர்ப்பு தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில், அவர் கர்ப்பமானார். பிறந்த குழந்தையும் தத்து கொடுக்கப்பட்டது.

இதற்கிடையே, அச்சிறுமியை ஹமீத் ராஜா என்ற இளைஞர் காதலித்தார். பின், இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த சூழலில், தன் மகளை, அவரது கணவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக வளர்ப்பு தந்தை புகார் அளித்ததை அடுத்து, ஹமீத் ராஜா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தனக்கு ஜாமின் வழங்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனு, டில்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அருண் மோங்கா முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

முஸ்லிம் சட்டத்தின் கீழ், 15 வயதுக்கு மேற்பட்ட பருவமடைந்த சிறுமியர் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறப் படுகிறது. ஆனால் இந்திய குற்றவியல் சட்டம், அத்தகைய திருமணங்களில் கணவரை குற்றவாளி ஆக்குகின்றன.



ஜாமின்

இது, ஒரு கடுமையான குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

இந்த விஷயத்தில் சட்டத் தெளிவு மிகவும் அவசியமாகிறது. எனவே, சீரான பொது சிவில் சட்டத்தை நோக்கி நகர வேண்டிய நேரம் இதுவல்லவா? அதை எதிர்ப்பவர்கள், மதச் சுதந்திரம் பறிபோகும் என்று எச்சரிப்பது உண்மை தான்.

அதேசமயம், இந்திய அரசியலமைப்பு சட்டம் அடிப்படை உரிமையை குடிமக்களுக்கு உறுதி செய்துள்ளது. இருப்பினும், தனிநபர்களை குற்றவாளியாக்கும் நடைமுறைகளுக்கு மதச் சுதந்திரம் பொருந்தாது. இதை கருத்தில் கொண்டு, இந்த வழக்கில் மனுதாரருக்கு ஜாமின் வழங்கப்படுகிறது.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us