விமானப்படை அதிகாரி கடிதத்தால் டில்லி சாமியார் சிக்கினார்
விமானப்படை அதிகாரி கடிதத்தால் டில்லி சாமியார் சிக்கினார்
விமானப்படை அதிகாரி கடிதத்தால் டில்லி சாமியார் சிக்கினார்
ADDED : செப் 26, 2025 04:40 AM

புதுடில்லி:படிப்பு உட்பட பல்வேறு விஷயங்களை காரணம் காட்டி மாணவியரை மிரட்டி, டில்லி சாமியார் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது, விமானப்படை அதிகாரி ஒருவரின் கடிதத்தின் வாயிலாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
டில்லியின் வசந்த் கஞ்ச் பகுதியில், 'ஸ்ரீ சாரதா இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மேனேஜ்மென்ட்' என்ற உயர்கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
கர்நாடகாவின் சிருங்கேரியில் உள்ள ஸ்ரீ சாரதா பீடத்தின் தலைமையில் இயங்கும் இந்த நிறுவனத்தில், டில்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவியர் உயர் கல்வி பயின்று வருகின்றனர்.
இங்கு, மேலாளராக இருந்த பார்த்தசாரதி எனும் சைதன்யானந்த சரஸ்வதி சாமியார், பல மாணவியரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவர் தலைமறைவானார்.
நிறுவன வளாகத்தில் போலீசார் நடத்திய சோதனையில், சாமியார் மீதான புகார் உறுதியானது. இதையடுத்து, அவர் மீது பாலியல் துன்புறுத்தல் உட்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கையில் கூறப் படுவதாவது:
கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட்டில் சைதன்யானந்த சாமியாரின் கொடுமைகள் குறித்து மாணவி ஒருவர் மற்றும் கல்லுாரியில் பயிலும் மற்றொரு மாணவியின் தந்தையான விமானப்படை அதிகாரி ஒருவர் ஸ்ரீ சாரதா பீடத்துக்கு கடிதங்களை அனுப்பினர்.
டில்லி உயர் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவியர் சிலரின் பெற்றோர் விமானப்படையில் பணிபுரியும் நிலையில், டில்லி விமானப்படை தலைமையகத்தில் இருந்தும் புகார் கடிதங்கள் அனுப்பப்பட்டன.
இதைத் தொடர்ந்து, டில்லி கல்லுாரிக்கு சென்ற ஸ்ரீ சாரதா பீடத்தைச் சேர்ந்தவர்கள், அங்கு பயிலும் 30க்கும் மேற்பட்ட மாணவியரிடம் விசாரணை நடத்தினர். இதில், இரவு நேரங்களில் மாணவியரை சாமியார் தன் அறைக்கு அழைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியது உறுதி செய்யப்பட்டது. மறுப்பு தெரிவிக்கும் மாணவியரின் கல்வியை அவர் சீர்குலைத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, கல்லுாரி வளாகத்தில் சோதனை நடத்தப்பட்டது. புகார் தெரிவித்த 32 மாணவியரிடம் விசாரணை நடத்தப்பட்டு, 16 பேரிடம் இருந்து வாக்குமூலம் பெறப் பட்டது.
இதில், பலமுறை வெளிநாடுகளுக்கு செல்லும் போதும், மாணவியரை வலுக்கட்டாயமாக மிரட்டி தன்னுடன் சைதன்யானந்த சாமியார் அழைத்துச் சென்றதும் தெரியவந்துள்ளது.
சாமியார் மாணவியருக்கு அனுப்பிய ஆபாச குறுந்தகவல்கள், படங்கள் உள்ளிட்டவை ஆதாரமாக பெறப்பட்டன. இந்த விவகாரத்தில், சாமியாருக்கு உடந்தையாக இருந்த கல்லுாரி துணை முதல்வர் ஸ்வேதா உட்பட மேலும் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டில்லியில் உள்ள சாரதா பீட கல்லுாரிக்கு உரிய பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவித்த போலீசார், தலைமறைவான சைதன்யானந்தாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, சைதன்யானந்த சாமியாரை கல்லுாரி நிர்வாகத்தின் அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்குவதாக அறிவித்துள்ள ஸ்ரீ சாரதா பீடம், 'அரசின் கீழ் கல்லுாரி இயங்குவதால், படிப்பு குறித்து மாணவியரோ, பெற்றோரோ கவலைப்பட வேண்டாம்' என தெரிவித்துள்ளது.