Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ தானாக இயங்கியது அவசரகால கருவி: 'ஏர் இந்தியா' விமானம் தரையிறக்கம்

தானாக இயங்கியது அவசரகால கருவி: 'ஏர் இந்தியா' விமானம் தரையிறக்கம்

தானாக இயங்கியது அவசரகால கருவி: 'ஏர் இந்தியா' விமானம் தரையிறக்கம்

தானாக இயங்கியது அவசரகால கருவி: 'ஏர் இந்தியா' விமானம் தரையிறக்கம்

ADDED : அக் 05, 2025 11:29 PM


Google News
புதுடில்லி: பிரிட்டனில் தரையிறங்கும் சமயத்தில், 'ஏர் இந்தியா' விமானத்தில் அவசரகால கருவியான, 'ராட்' எனப்படும், 'ரேம் ஏர் டர்பைன்' தானாக இயங்கியது. எனினும், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பர்மிங்ஹாம் நோக்கி ஏர் இந்தியாவின் ஏ.ஐ., 117 விமானம் நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்றது.

பதற்றம் பர்மிங்ஹாம் நகரை விமானம் நெருங்கியபோது, 400 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென விமானத்தின், 'ரேம் ஏர் டர்பைன்' என்ற அவசரகால கருவி தனிச்சையாக இயங்கியதால் விமானிகள் பதற்றம் அடைந்தனர். எனினும், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

இது குறித்து ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:

அமிர்தசரஸில் இருந்து பர்மிங்ஹாம் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும் சமயத்தில், எதிர்பாராதவிதமாக அவசரகால கருவியான ரேம் ஏர் டர்பைன் இயங்கியது.

அதே நேரம் விமானத்தின் மின்சக்தி மற்றும் ஹைட்ராலிக் அளவீடுகள் அனைத்தும் இயல்பாகவே இருந்துள்ளன.

எனினும், பர்மிங்ஹாம் நகரில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டிருக்கிறதா என்பதை ஆராய்வதற்காக ஓடு தளத்தின் ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனால், பர்மிங்ஹாமில் இருந்து டில்லி நோக்கி புறப்படும் ஏ.ஐ., 114 விமானம் ரத்து செய்யப்பட்டு, பயணியருக்காக மாற்று ஏற் பாடு செய்யப்பட்ட து.

ஏர் இந்தியாவை பொறுத்தவரை பயணியர் மற்றும் விமான சிப்பந்திகளின் பாதுகாப்புக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமானத்தில் இருக்கும் இரட்டை இன்ஜின்கள், ஹைட்ராலிக் மற்றும் மின்சக்தி அமைப்பில் பிரச்னை ஏற்பட்டால் மட்டுமே, 'ரேம் ஏர் டர்பைன்' கருவி தானாக இயங்கும். இது விமானத்தின் கீழ் பகுதியில் இருக்கும் சிறிய காற்றாலை போன்ற கருவி.

விசாரணை இன்ஜின் அல்லது மின்சக்தியில் கோளாறு ஏற்பட்டால், தானாகவே வெளியே வந்து காற்றை பயன்படுத்தி விமானம் பறப்பதற்கான அவசர உந்து சக்தியை அளிக்கும்.

ஆனால், பர்மிங்ஹாமில் விமானம் தரையிறங்கும்போது, அவசியமே இல்லாமல், 'ரேம் ஏர் டர்பைன்' கருவி தானாக இயங்கி இருக்கிறது.

எனினும் இதனால், எந்த பிரச்னையும் இல்லை என மூத்த விமானிகள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us