Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ மதம் மாறிய பிறகும் பட்டியலின சலுகைகளை அனுபவிப்பதை ஏற்க முடியாது: கோர்ட் அதிரடி

 மதம் மாறிய பிறகும் பட்டியலின சலுகைகளை அனுபவிப்பதை ஏற்க முடியாது: கோர்ட் அதிரடி

 மதம் மாறிய பிறகும் பட்டியலின சலுகைகளை அனுபவிப்பதை ஏற்க முடியாது: கோர்ட் அதிரடி

 மதம் மாறிய பிறகும் பட்டியலின சலுகைகளை அனுபவிப்பதை ஏற்க முடியாது: கோர்ட் அதிரடி

Latest Tamil News
அலகாபாத்: 'ஹிந்து, சீக்கியம் மற்றும் பவுத்த மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு மாறியவர்கள், தொடர்ந்து பட்டியலினத்தவருக்கான சலுகைகளை பெற்று வருவதை அனுமதிக்க முடியாது' என, அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின் மஹாராஜ்கன்ஞ் மாவட்டத்தில் உள்ள கோரக்பூரை சேர்ந்தவர் ஜிதேந்திர சஹானி.

இவர் தன் கிராமத்தை சேர்ந்த சிலரை கிறிஸ்துவ மதத்திற்கு மத மாற்றம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், ஹிந்து மத நம்பிக்கைகள் பற்றி தரக்குறைவாக விமர்சித்து வந்துள்ளார்.

ஹிந்து மத நம்பிக்கைகளை புண்படுத்துவதால், சஹானி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கிராமத்தினர் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், அவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதை எதிர்த்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சஹானி சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:

ஹிந்து சமூகத்தில் பிறந்த சஹானி, பின்னர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியது சாட்சியங்களை விசாரித்ததில் தெரிய வருகிறது.

தற்போது அவர் மத போதகராகவும் செயல்பட்டு வருகிறார். ஆனால், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தன்னை ஒரு ஹிந்துவாகவே அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.

அப்படியெனில், அவர் சார்ந்த பட்டியலின ஜாதியின் சலுகைகளை அவர் தொடர்ந்து பெற்று வருவதாக தெரிகிறது.

ஹிந்து, சீக்கியம் மற்றும் பவுத்த மதத்தில் இருந்து பிற மதத்திற்கு மாறிய பட்டியலின மக்களுக்கு, அரசின் சலுகைகள் நிறுத்தப்பட வேண்டும்.

ஒருவர் மதம் மாறிய பின், முந்தைய ஜாதி நிலையிலேயே அவர் தொடர்வதை அனுமதிக்க முடியாது என, உச்ச நீதிமன்றமும் தெரிவித்துள்ளது. அப்படி தொடர்ந்தால், அது அரசியல் சாசனத்தின் மீது நடத்தப்படும் மோசடி.

எனவே, சம்பந்தப்பட்ட சஹானி, மதம் மாறிய பிறகும் பட்டியலின ஜாதிக்கான சலுகைகளை பெற்று வருகிறாரா என்பதை மூன்று மாதத்திற்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடுகிறோம்.

ஒருவேளை ஜாதி அடிப்படையில் அரசின் சலுகைகளை அவர் அனுபவித்து வந்தால், சஹானிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

உ.பி., அரசின் தலைமைச் செயலர், கேபினட் செயலர், சமூக நலம் மற்றும் சிறுபான்மையினர்கள் நலத் துறையை சேர்ந்த உயரதிகாரிகள், இந்த விவகாரம் தொடர்பாக மாநிலம் தழுவிய அளவில் ஆய்வுகள் நடத்த வேண்டும்.

மதம் மாறிய பிறகும், பட்டியலினப் பிரிவில் இருந்து நீக்கப்படாமல், அதற்கான சலுகைகளை எத்தனை பேர் அனுபவித்து வருகின்றனர் என்பதை ஆய்வு செய்து, நான்கு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடுகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us