மிக் 21 போர் விமானங்களுக்கு பிரியாவிடை!
மிக் 21 போர் விமானங்களுக்கு பிரியாவிடை!
மிக் 21 போர் விமானங்களுக்கு பிரியாவிடை!

சண்டிகர்: இந்திய விமானப்படையில் 63 ஆண்டுகள் சேவையாற்றிய மிக் 21 ரக போர் விமானங்களுக்கு இன்று பிரியா விடை வழங்கப்பட்டது.
இந்திய விமானப்படையில், ரபேல், சுகோய், மிக், மிராஜ், தேஜஸ் போர் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் சோவியத் யூனியனில் தயாரிக்கப்பட்ட மிக் 21 ரக போர் விமானங்கள், 60 ஆண்டுகளாக இந்திய விமானப்படையின் பயன்பாட்டில் இருந்தன. நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட புதிய விமானங்களுக்கு இந்திய விமானப்படை மாறுவதை முன்னிட்டு, பழைய மாடல் விமானங்களுக்கு ஓய்வு தர முடிவு செய்யப்பட்டது.
எனவே, மிக் 21 ரக விமானங்களின் சேவையை நிறுத்த பாதுகாப்புத்துறை திட்டமிட்டது. அதன்படி, சண்டிகரில் மிக் 21 ரக போர் விமானங்களின் வழியனுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தளபதிகளும் கலந்து கொண்டனர். அப்போது, கடைசியாக ஒருமுறை மிக் 21 ரக விமானங்கள் வானில் பறந்தன. இதனை கண்டு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும், வீரர்களும் நெகிழ்ச்சியடைந்தனர்.
மிக் 21 ரக போர் விமானங்கள், 1965 மற்றும் 1971ல் நடந்த போரிலும், கார்கில் போர் மற்றும் பாலக்கோட் ஆபரேஷன்களில் முக்கிய பங்கு வகித்தன. மிக்-21 ரக போர் விமானங்கள் ஓய்வு பெற்ற நிலையில், அவற்றுக்கு பதிலாக தேஜஸ் மார்க் 1ஏ ரக போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட இருக்கின்றன. இதற்காக, 97 இலகு ரக தேஜஸ் போர் விமானங்களை வாங்குவதற்காக, ரூ.62,370 கோடியில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு துறை ஒப்பந்தம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.