கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சரக்கு கப்பலில் தீ விபத்து; 4 பேர் மாயம்
கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சரக்கு கப்பலில் தீ விபத்து; 4 பேர் மாயம்
கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சரக்கு கப்பலில் தீ விபத்து; 4 பேர் மாயம்
ADDED : ஜூன் 09, 2025 02:09 PM

கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோடு - கண்ணூர் துறைமுகங்களுக்கு நடுவே, சரக்கு கப்பல் ஒன்று நடுக்கடலில் தீப்பற்றிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து கடந்த ஜூன் 7ம் தேதி புறப்பட்ட சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் சீன சரக்கு கப்பல், நாளை மும்பையை சென்றடைய உள்ளது. இந்த நிலையில், கேரளாவின் பேய்பூர் கடல் பகுதியில் இருந்து வடக்கே 70 கடல் மைல் தொலைவில் இந்தக் கப்பல் சென்று கொண்டிருந்த போது திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கொச்சியில் உள்ள கடல் கண்காணிப்பு மையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய கடற்படையினரும், கடலோர காவல் படையினரும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், கொச்சி, பேய்பூரில் இருந்து 3 படகுகளில் மேலும் சில கடலோர காவல்படை வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தக் கப்பலில் 22 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் 4 பேர் மாயமான நிலையில், 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். மாயமானவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கடந்த மே மாதம் 24ம் தேதி கொச்சி அருகே கடலில் லைபீரியா நாட்டின் சரக்கு கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், நீரில் அடித்துச் செல்லப்பட்ட கன்டெய்னர்களில் இருந்த எண்ணெய் தண்ணீரில் கலந்து மாசை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்த இரு வாரங்களில் மற்றொரு சரக்கு கப்பல் விபத்துக்குள்ளாக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.