மும்பை புறநகர் ரயிலில் இருந்து தவறி விழுந்து 4 பேர் பரிதாப பலி
மும்பை புறநகர் ரயிலில் இருந்து தவறி விழுந்து 4 பேர் பரிதாப பலி
மும்பை புறநகர் ரயிலில் இருந்து தவறி விழுந்து 4 பேர் பரிதாப பலி
ADDED : ஜூன் 10, 2025 12:48 AM

மும்பை: மும்பையில், கூட்ட நெரிசல் காரணமாக புறநகர் ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த ரயில்வே போலீஸ் கான்ஸ்டபிள் உட்பட நான்கு பேர் கீழே விழுந்து உயிரிழந்தனர்; ஆறு பேர் படுகாயம்அடைந்தனர்.
மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள புறநகர் ரயில்களில் எப்போதும் கூட்டம் அதிகரித்து காணப்படும்.
படிக்கட்டு பயணம்
குறிப்பாக, காலை மற்றும் மாலை வேளைகளில், புறநகர் ரயில்களில் நிற்கக்கூட இடம் கிடைக்காது.
இந்நிலையில், மஹாராஷ்டிராவின் தானேவின் கசாராவில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி மஹாராஜ் டெர்மினல் ரயில் நிலையத்திற்கு நேற்று காலை புறநகர் ரயில் சென்றது.
இந்த ரயில், மும்பை புறநகர் பகுதியான மும்ப்ரா ரயில் நிலையம் அருகே நேற்று காலை 9:30 மணிக்கு சென்றபோது, கூட்டநெரிசல் காரணமாக ஏராளமான பயணியர் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்தனர்.
இதனால், பயணியருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு படிக்கட்டுகளில் நின்றிருந்த சிலர் எதிர்பாராதவிதமாக ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்தனர்.
அப்போது, எதிர்திசையில் கசாரா நோக்கி சென்ற ரயிலின் இன்ஜின் டிரைவர், இச்சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு உடனே தகவல் அளித்தார்.
இதன்படி அங்கு வந்த போலீசார், மீட்புக்குழு உதவியுடன் பயணியரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஆறு பேரை, அருகில் உள்ள மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர்.
இதன் காரணமாக மும்பை- - தானே இடையேயான புறநகர் ரயில் போக்குவரத்து சேவை சில மணி நேரம் நிறுத்தப்பட்டது.
கூட்டநெரிசல்
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூட்டநெரிசல் மட்டும் தான் இந்த விபத்திற்கு காரணமா? அல்லது பயணியர் இடையே ஏதேனும் மோதல் ஏற்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
இந்த விபத்தை தொடர்ந்து, மும்பை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் பொருத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. விபத்தில், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு, தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டை மாநில அரசு அறிவித்து உள்ளது.