தங்கம் 'டிபாசிட்' திட்டம் நிறுத்தம்: மத்திய அரசு அறிவிப்பு
தங்கம் 'டிபாசிட்' திட்டம் நிறுத்தம்: மத்திய அரசு அறிவிப்பு
தங்கம் 'டிபாசிட்' திட்டம் நிறுத்தம்: மத்திய அரசு அறிவிப்பு
ADDED : மார் 27, 2025 03:51 AM

புதுடில்லி: தங்கத்தை வங்கியில், 'டிபாசிட்' செய்து வட்டி வருமானம் ஈட்டும், தங்க முதலீட்டு திட்டத்தை நேற்று முதல் நிறுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தங்கம் இறக்குமதியைக் குறைக்கவும், பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருக்கும் தங்கத்தை சேகரித்து நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தவும், தங்க முதலீட்டு திட்டத்தை, 2015, செப்.,15-ல் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டத்தில் டிபாசிட் செய்யப்படும் தங்கத்தை சந்தையில் மீண்டும் அரசு வெளியிடுவதால், தங்கம் இறக்குமதி குறையும் என்ற நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
தங்க முதலீட்டு திட்டத்தில், வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள தங்கத்தை வங்கிகளில் டிபாசிட் செய்து அதற்கு வட்டி பெறலாம். தங்க நகை மட்டுமல்லாது தங்க நாணயம், தங்கக்கட்டிகளையும் டிபாசிட் செய்யலாம். குறைந்தபட்சம் 10 கிராம் தங்கத்தை டிபாசிட் செய்ய வேண்டும். உச்ச வரம்பு ஏதும் கிடையாது.
இத்திட்டம் ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை குறுகிய காலம்; ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை நடுத்தர காலம்; 12 முதல் 15 ஆண்டுகள் வரை நீண்ட காலம் என மூன்று விதமாக செயல்படுத்தப்படுகிறது.
தற்போது நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்களை உடனடியாக நிறுத்துவதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் செயல்பாடு, சந்தை வளர்ச்சி உள்ளிட்ட அம்சங்களை விரிவாக மதிப்பீடு செய்தபின், இந்த முடிவு எடுக்கப்பட்டுஉள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இத்திட்டத்தின் நடுத்தர மற்றும் நீண்ட கால பிரிவின்கீழ் இனி வங்கிகளோ, வேறு விற்பனை மையங்களோ தங்க டிபாசிட்களை ஏற்காது. எனினும் வங்கிகளின் விருப்பத்திற்கேற்ப குறுகிய கால திட்டத்தை தொடரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே, நடுத்தர மற்றும் நீண்டகால அடிப்படையில் தங்கத்தை முதலீடு செய்திருந்தால், தற்போதைய விதிகளின்படி, அதற்கான காலம் முடியும் வரை பலன்களை பெறலாம்.