2025ல் உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா; டாப் 10 நாடுகள் இதோ!
2025ல் உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா; டாப் 10 நாடுகள் இதோ!
2025ல் உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா; டாப் 10 நாடுகள் இதோ!
ADDED : மார் 20, 2025 07:47 PM

புதுடில்லி: நடப்பு 2025ம் ஆண்டில் உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து எட்டாவது ஆண்டாக, பின்லாந்து முதலிடத்தை பெற்றுள்ளது.
மகிழ்ச்சி என்ற உணர்வு இல்லாவிட்டால் வாழ்க்கை பெரிய சுமையாகி விடும் என்பார்கள். அந்த உணர்வு இன்றி, எந்த மாபெரும் சாதனையும் நடந்ததில்லை என்பதும் நாம் அறிந்ததே. ஆக்ஸ்போர்டு பல்கலையின் நல்வாழ்வு ஆராய்ச்சி மையம், 2025ம் ஆண்டில் உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.
சர்வதேச மகிழ்ச்சி தினம் முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது. இதற்கென உலகின் 147 நாடுகளில் மக்கள் வாழ்க்கைத்தரம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சமூக ஆதரவு, சுகாதாரம், சுதந்திரம், பெருந்தன்மை, ஊழல் குறித்த மக்கள் எண்ணம், மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டன. இது பற்றி மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
இதில், அதிகபட்ச புள்ளிகள் 10 என்றால், முதலிடம் பெற்ற நாடான பின்லாந்து 7.74 புள்ளிகளுடன் உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற தகுதியை பெற்றது.தொடர்ந்து எட்டாம் ஆண்டாக இந்த தகுதியை பின்லாந்து பெற்றுள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து ஆகியவை முதல் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.
இந்தியாவின் அண்டை நாடுகளில், இலங்கை 133வது இடத்திலும், வங்கதேசம் 134வது இடத்திலும், நேபாளம் 92வது இடத்திலும், சீனா 68வது இடத்திலும் உள்ளன. 2012ம் ஆண்டில் 11 வது இடத்தில் இருந்த அமெரிக்கா, 24 வது இடத்திற்கு சென்றுள்ளது. இங்கிலாந்து 23வது இடத்தைப் பிடித்துள்ளது.
'டாப் 10' நாடுகள் பட்டியல் வருமாறு;
1. பின்லாந்து
2. டென்மார்க்
3. ஐஸ்லாந்து
4. ஸ்வீடன்
5. நெதர்லாந்து
6. கோஸ்டாரிகா
7.நார்வே
8. இஸ்ரேல்
9. லக்சம்பர்க்
10. மெக்சிகோ.
மகிழ்ச்சியற்ற நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. சியாரா லியோன், லெபனான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
அதெப்படி இருக்க முடியும்?
இந்த மகிழ்ச்சி பட்டியலில், இந்தியாவை காட்டிலும் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் 109ம் இடத்தில் உள்ளது. இந்தியா 118ம் இடத்தில் உள்ளது.
கல்வி, சமூகச்சூழல், பொருளாதாரம், மக்கள் வாழ்க்கைத்தரம் அனைத்திலும் இந்தியாவை விட பின் தங்கியுள்ள பாகிஸ்தான் முன்னணியிலும், இந்தியா பின்தங்கியும் இருப்பதாக அறிக்கையில் கூறியுள்ளனர். இத்தகைய முடிவுகள், அறிக்கைகள், ஆய்வுகளின் உண்மைத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.