ஐகோர்ட் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வராது: சுப்ரீம் கோர்ட்
ஐகோர்ட் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வராது: சுப்ரீம் கோர்ட்
ஐகோர்ட் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வராது: சுப்ரீம் கோர்ட்
ADDED : செப் 24, 2025 05:10 AM

புதுடில்லி: உத்தர பிரதேச மாநிலம், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஒருவரது வழக்கு கடந்த 13 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட கோரி அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை ஆய்வு செய்த நீதிபதிகள் கூறியதாவது:
உயர் நீதிமன்றங்கள் உச்ச நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. உயர் நீதிமன்றங்கள் பாதி அளவு எண்ணிக்கையிலான நீதிபதிகளை வைத்து செயல்படும் போது, அவர்களிடம் அனைத்து வழக்குகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என எப்படி நீங்கள் எதிர்பார்க்க முடியும்.
உங்கள் வழக்கை விட பழைய வழக்குகள் எல்லாம் நிலுவையில் உள்ளன. வழக்கை விரைந்து முடிக்க உயர் நீதிமன்றத்திலேயே மனு அளியுங்கள். ஏற்கனவே மனு அளித்திருந்தால் மீண்டும் வழங்குங்கள்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
இதையடுத்து மனுதாரர் வழக்கை வாபஸ் பெற்றார்.
வழக்கு விசாரணையின் போது நீதிபதி விக்ரம் நாத் கூறுகையில், 'நான் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய போது, வழக்கை பட்டியலிடவே போராட வேண்டும். நூற்றுக்கணக்கான மனு அளிக்க வேண்டும். அதற்கே பல ஆண்டுகள் ஆகும்' என்றார்.
மத்திய சட்ட அமைச்சக புள்ளிவிவரப்படி, நாட்டில் உயர் நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 1,122. ஆனால் 792 நீதிபதிகளுடன் மட்டுமே உயர் நீதிமன்றங்கள் இயங்குகின்றன. 330 இடங்கள் காலியாக உள்ளன. இது செப்டம்பர் 1ம் தேதி வரையிலான நிலவரம்.