வீட்டுக்கே சென்று சிகிச்சை; கர்நாடகாவில் புதிய திட்டம்
வீட்டுக்கே சென்று சிகிச்சை; கர்நாடகாவில் புதிய திட்டம்
வீட்டுக்கே சென்று சிகிச்சை; கர்நாடகாவில் புதிய திட்டம்
ADDED : ஜூன் 10, 2025 01:08 AM

பெங்களூரு : புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான நோய்களால் அவதிப்படும் நோயாளிகளுக்கு, வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்க, கர்நாடக சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
இது குறித்து மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
புற்றுநோய் உட்பட கடுமையான நோயால் அவதிப்படும் ஏழைகள், மூத்த குடிமக்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க சுகாதாரத் துறை திட்டம் வகுத்துள்ளது. இதற்காக அவர்களின் வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக பெங்களூரு சி.வி.ராமன் நகர் பொது மருத்துவமனையில் இத்தகைய வசதி செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. 'பைலட்' திட்டத்தின் கீழ், நோயாளிகளின் வீடுகளுக்கே டாக்டர்கள் சென்று இலவச சிகிச்சை அளிப்பர்.
மூத்த குடிமக்கள், புற்றுநோயாளிகள், இதய நோய், மூளை பாதிப்பு உட்பட கடும் நோய்களால் அவதிப்படுவோருக்கு இச்சலுகை கிடைக்கும். இவர்கள் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இத்தகைய நோயாளிகள், அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும்போது நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இவர்களுக்கு அவசர சிகிச்சை தேவைப்படலாம். இதை கருத்தில் வைத்தே, 'பைலட்' திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. மொபைல் மருத்துவமனை போன்று நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று சிகிச்சை அளிக்கப்படும்.
முதற்கட்டமாக சி.வி.ராமன் நகர் பொது மருத்துவமனையில் இருந்து, ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இலவச சிகிச்சை கிடைக்கும். வரும் நாட்களில் மற்ற இடங்களுக்கும் திட்டம் விஸ்தரிக்கப்படும். ஏழை மக்களுக்கு திட்டம் மிகவும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.