எப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன்! பா.ஜ.,வின் ரமேஷ் ஜார்கிஹோளி புலம்பல்
எப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன்! பா.ஜ.,வின் ரமேஷ் ஜார்கிஹோளி புலம்பல்
எப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன்! பா.ஜ.,வின் ரமேஷ் ஜார்கிஹோளி புலம்பல்
ADDED : பிப் 12, 2024 06:39 AM

கர்நாடகாவில் பெங்களூருக்கு அடுத்தபடியாக, அதிக சட்டசபை தொகுதிகளை கொண்டது பெலகாவி மாவட்டம். இங்கு 18 தொகுதிகள் உள்ளன. இம்மாவட்டத்தில் பெலகாவி, சிக்கோடி என்று, இரண்டு லோக்சபா தொகுதிகள் உள்ளன. பெலகாவி அரசியலில் 'பஞ்ச பாண்டவர்கள்' என்று அழைக்கப்படும், ஜார்கிஹோளி சகோதரர்களுக்கு செல்வாக்கு உள்ளது.
5 சகோதரர்கள்
சகோதரர்களின் மூத்தவரான ரமேஷும், மூன்றாவது சகோதரர் பாலசந்திராவும் பா.ஜ.,வில் உள்ளனர். இரண்டாவது சகோதரர் சதீஷ், காங்கிரசில் உள்ளார்; பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருக்கிறார்.
நான்காவது சகோதரர் லகன் சுயேச்சை எம்.எல்.சி.,யாக உள்ளார். கடைசி சகோதரர் பீம்ஷி எந்த கட்சியிலும் இல்லை. ஆனாலும் சகோதரர்களின் அரசியல் வெற்றிக்காக உதவி வருகிறார்.
ரமேஷ் முன்பு காங்கிரசில் இருந்தவர். துணை முதல்வர் சிவகுமாருடன் ஏற்பட்ட மோதலால், பா.ஜ.,வுக்கு சென்றார். அவர் சென்றது மட்டுமின்றி தன்னுடன் 16 எம்.எல்.ஏ.,க்களையும் அழைத்து சென்றார்.
பா.ஜ., ஆட்சிக்கு வர முக்கிய காரணமாக இருந்தார். இதனால் அவருக்கு பா.ஜ.,வில் செல்வாக்கு அதிகரித்தது. முக்கிய துறையான நீர்பாசனத் துறை கிடைத்தது. ஆனால் ஆபாச வீடியோ வழக்கில் சிக்கியதால், அமைச்சர் பதவியை இழந்தார். அன்றில் இருந்து அவரது செல்வாக்கு குறைய ஆரம்பித்தது.
சரிந்த செல்வாக்கு
கடந்த சட்டசபை தேர்தலில் பெலகாவி ரூரல், அதானி தொகுதிகளில் தான் கூறும் வேட்பாளர்களுக்கே, 'சீட்' தர வேண்டும் என்று, கட்சி மேலிடத்திடம் அடம்பிடித்து, இருவருக்கு 'சீட்' வாங்கி கொடுத்தார்.
ஆனால் இருவருமே தோற்றனர். இதனால் ரமேஷுன் செல்வாக்கு சரிந்தது. அதன்பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
லோக்சபா தேர்தல் நெருங்குவதால், மீண்டும் தனது வேலையை காட்ட ஆரம்பித்து உள்ளார். பெலகாவி, சிக்கோடி தொகுதிகளில் தான் கூறும், வேட்பாளர்களுக்கு 'சீட்' வேண்டும் என்று, பழைய புராணத்தை மறுபடியும் பாட ஆரம்பித்து உள்ளார்.
பெலகாவி தொகுதியில் வாலாட்ட முடியாது என்பதால், சிக்கோடியில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனாலும் அவரது பேச்சை கேட்க, கட்சியில் யாரும் தயாராக இல்லை. 'எப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன்'னு என்பது போல, ஆதரவாளர்களிடம் புலம்பிக் கொண்டிருக்கிறார்- நமது நிருபர் -.