Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/கிராமங்களுக்கான குடிநீர் வசதியில் குறை இருந்தால்.. நிதி கிடையாது! பணத்தை நிறுத்தி வைக்க பிரதமர் மோடி உத்தரவு

கிராமங்களுக்கான குடிநீர் வசதியில் குறை இருந்தால்.. நிதி கிடையாது! பணத்தை நிறுத்தி வைக்க பிரதமர் மோடி உத்தரவு

கிராமங்களுக்கான குடிநீர் வசதியில் குறை இருந்தால்.. நிதி கிடையாது! பணத்தை நிறுத்தி வைக்க பிரதமர் மோடி உத்தரவு

கிராமங்களுக்கான குடிநீர் வசதியில் குறை இருந்தால்.. நிதி கிடையாது! பணத்தை நிறுத்தி வைக்க பிரதமர் மோடி உத்தரவு

ADDED : அக் 04, 2025 01:37 AM


Google News
Latest Tamil News
நாடு முழுதும் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு, நேரடியாக குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கும், 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தில் முறைகேடு, தரம் குறைவு, தாமதம் போன்ற புகார்கள் எழுந்தால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைக்கும்படி, மத்திய அரசின் உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

'நாடு முழுதும் அனைத்து கிராமங்களிலும் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும், குழாய்கள் மூலம் நேரடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, 2019 ஆக., 15ல், சுதந்திர தின உரையில், பிரதமர் மோடி அறிவித்தார்.

இதன்படி, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு, சுத்தமான குடிநீர் தருவதற்கான நடவடிக்கைகள், அந்த ஆண்டே எடுக்கப்பட்டன.

இத்திட்டத்தின் இலக்கு, 2024 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் தாமதமானது. இதையடுத்து, '2028க்குள் ஜல் ஜீவன் திட்டம் முழுதுமாக நிறைவேற்றப்படும்' என, கடந்த பட்ஜெட் உரையின் போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

குழு நியமனம் அதோடு, 2025 - 26ம் நிதியாண்டுக்கான இந்த திட்டத்தின் கூடுதல் ஒதுக்கீடாக, 67,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இத்திட்டம் எந்தளவுக்கு நிறைவேற்றப்படுகிறது; அதில் ஏற்பட்டுள்ள சுணக்கம் மற்றும் சிக்கல்கள் குறித்து ஆராய, கடந்த மே மாதம், 100 சிறப்புக்குழுக்களை மத்திய அரசு நியமித்தது.

அந்த குழுக்களில், மத்திய அரசின் இணைச் செயலர்கள், இயக்குநர்கள் இடம் பெற்றனர். அந்த குழுக்கள் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து, 29 மாநிலங்களுக்கு சென்று, 135 மாவட்டங்களில், ஜல் ஜீவன் திட்டப் பணிகளை ஆய்வு செய்தன.

அதனடிப்படையில், திட்டம் தொடர்பான புகார்கள், தாமதம் ஆவதற்கான காரணங்கள், திட்ட மதிப்பீடு அதிகரிப்பு, பணிகளின் தரம் போன்ற விஷயங்களை நேரடியாக ஆராய்ந்து அறிக்கை தயாரிக்கப்பட்டது.

விவாதம் சமீபத்தில் டில்லியில் பிரதமர் மோடி தலைமையில், ஜல் ஜீவன் திட்டம் தொடர்பாக சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில், சிறப்புக் குழுக்கள் தயாரித்த அறிக்கை மீது விவாதம் நடந்தது.

அந்த அறிக்கையில், தரம் குறைவாக பணி நடந்ததால் நிதியை அதிகாரிகள் நிறுத்தி வைத்திருப்பது, பொருட்களின் விலை குறைந்து காணப்பட்ட கொரோனா ஊரடங்கு காலத்திலும், கூடுதல் விலை போட்டு, 'பில்'கள் போடப்பட்டிருப்பது போன்ற விஷயங் கள் சுட்டிக்காட்டப்பட்டன.

மேலும், திட்டப்பணிகளை பார்வையிடுவதற்கென மூன்றாவது தரப்பு நியமிக்கப்பட்டிருந்தாலும், அந்த ஆய்வுகளும் கூட, சில மாநிலங்களில் திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

எனினும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கில், 80 சதவீதத்தை இத்திட்டம் பூர்த்தி செய்திருப்பது உறுதியானது. பஞ்சாப், குஜராத், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் இத்திட்டம் 100 சதவீதம் நிறைவேற்றப் பட்டு விட்டது.

மேற்கு வங்கம், கேரளா, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், ஆந்திரா போன்ற மாநிலங்களில், இத்திட்டத்தில் முன்னேற்றம் காணப்படவில்லை என்பதையும் சிறப்புக்குழுக்கள் கண்டுபிடித்து உள்ளன.

அறிவுறுத்தல் இது குறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

மிக முக்கியமான ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் ஏற்பட்டுள்ள சுணக்கம், முறைகேடுகளை முழுதுமாக களைய வேண்டும்.

குறிப்பாக, சிறிய அளவில் கூட குறைகளோ, புகார்களோ இருக்குமேயானால், ஒப்பந்ததாரர்களுக்கு தர வேண்டிய நிலுவை நிதியை உடனடியாக நிறுத்தி வைக்கும்படி, அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

திட்டப்பணிகளை திரும்ப திரும்ப ஆய்வு செய்ய வேண்டும். குறைகள் இருந்தால், அவற்றை நிவர்த்தி செய்து, உரிய காலக்கெடுவுக்குள், ஏற்கனவே ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள தரத்துடன் செய்து தர வேண்டும்.

அப்படி செய்யவில்லை எனில், எக்காரணம் கொண்டும் நிதி அளிக்க வேண்டாம். முழு அளவில் திருப்தியுடன் கூடிய பணிகள் நடக்கின்றனவா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இதில் எந்த சமரசமும் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

தமிழகத்தில் 89 சதவீதம்

தமிழக கிராமங்களில், மொத்தம் 1 கோடியே, 25 லட்சத்து, 26,461 வீடுகள் உள்ளன. அதில், 2019 ஆக., 15 வரை, 17.37 சதவீதம், அதாவது 21 லட்சத்து, 76,071 வீடுகளுக்கு மட்டுமே, குடிநீர் குழாய் இணைப்பு இருந்தது. ஆனால், ஜல் ஜீவன் திட்டத்தால் இப்போது, 89.25 சதவீதம் அதாவது, 1 கோடியே, 11 லட்சத்து, 79,748 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணி நடக்கிறது. கழிவுநீர் மேலாண்மை, நீர் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது போன்ற பணிகளும் இத்திட்டத்தின் கீழ் நடக்கின்றன.



- நமது டில்லி நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us