சர்வதேச சந்தையை கலக்கும் இந்தியாவின் 'கோலி சோடா' புதுமையால் புத்துயிர் பெறும் பாரம்பரியம்
சர்வதேச சந்தையை கலக்கும் இந்தியாவின் 'கோலி சோடா' புதுமையால் புத்துயிர் பெறும் பாரம்பரியம்
சர்வதேச சந்தையை கலக்கும் இந்தியாவின் 'கோலி சோடா' புதுமையால் புத்துயிர் பெறும் பாரம்பரியம்
ADDED : மார் 25, 2025 08:53 AM

புதுடில்லி: இந்தியாவின் பாரம்பரிய பானமான கோலி சோடாவுக்கு, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய, வளைகுடா நாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் பன்னாட்டு குளிர்பானங்களின் வருகையால், பாரம்பரியமிக்க கோலி சோடாவின் தேவை குறைந்து, அதன் சந்தை கிட்டத்தட்ட மறைந்தே போனது. சமீபத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, கோலி சோடாவுக்கு உள்நாட்டில் மீண்டும் சந்தை உருவானது.
இந்நிலையில், தற்போது, அதே கோலி சோடா, 'கோலி பாப் சோடா' என்ற பெயரில், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய, வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
சோதனை அடிப்படையில், இந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த நிலையில், நல்ல வரவேற்பு கிடைத்து இருப்பதாக, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்து உள்ளது. கடந்த பிப்., 4ம் தேதி, ஏ.பி.இ.டி.ஏ., எனப்படும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாடு ஆணையம், சர்வதேச சந்தையில், கோலி பாப் சோடாவை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது.
'பேர் எக்ஸ்போர்ட் இந்தியா' உடன் இணைந்து, வளைகுடா நாடுகளில் உள்ள லுாலுா ஹைபர் மார்க்கெட்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட கோலி பாப் சோடாவுக்கு, அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
இதே போல், பிரிட்டனில் கோலி பாப் சோடா, கலாசார அடையாளமாக மாறி வருகிறது. பாரம்பரிய இந்திய பானத்தை புதுமையான பெயரில் கொண்டு வந்திருப்பது, அங்குள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கோலி சோடா மட்டுமின்றி, மிசோரமில் இருந்து அந்துாரியம் மலர்கள் சிங்கப்பூருக்கும், புவிசார் குறியீடு பெற்ற முசாபர்நகர் வெல்லத்துக்கு பங்களாதேஷிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக, ஏ.பி.இ.டி.ஏ., தெரிவித்துள்ளது.