லஞ்சம் வாங்கிய ஐ.ஓ.சி., அதிகாரி சஸ்பெண்ட்
லஞ்சம் வாங்கிய ஐ.ஓ.சி., அதிகாரி சஸ்பெண்ட்
லஞ்சம் வாங்கிய ஐ.ஓ.சி., அதிகாரி சஸ்பெண்ட்
ADDED : மார் 17, 2025 12:22 AM
கொச்சி: கேரளாவில் காஸ் ஏஜன்சி உரிமையாளரிடம், 2 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்று கைதான, ஐ.ஓ.சி., எனப்படும், இந்தியன் ஆயில் நிறுவன துணை பொது மேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவில் இந்தியன் ஆயில் நிறுவன எர்ணாகுளம் அலுவலகத்தில் துணை பொதுமேலாளராக பணியாற்றுபவர் அலெக்ஸ் மேத்யூ.
காஸ் ஏஜன்சி நிறுவன உரிமையாளர் ஒருவரிடம் மேத்யூ, 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அவ்வாறு தராவிட்டால், அவரது ஏஜன்சி வாடிக்கையாளர்களை வேறு ஏஜன்சிக்கு மாற்றி விடுவதாக மிரட்டியுள்ளார்.
அவர் லஞ்சம் தராததை தொடர்ந்து, 1,200 வாடிக்கையாளர்களை மற்ற ஏஜன்சிக்கு மாற்றி உத்தரவிட்டார்.
மேலும், வாடிக்கையாளர்களை மாற்றாமல் இருக்க, தான் திருவனந்தபுரம் வரும்போது 2 லட்சம் ரூபாய் தர வேண்டும் என, காஸ் ஏஜன்சி உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.
எனினும் லஞ்சம் தர விரும்பாத அவர், இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்கள் கொடுத்த ஆலோசனையின் படி, காஸ் ஏஜன்சி உரிமையாளர் 2 லட்சம் ரூபாயை மேத்யூவிடம் அளித்தபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்நிலையில், மேத்யூவை சஸ்பெண்ட் செய்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் முதன்மை பொதுமேலாளர் கீத்திகா வர்மா நேற்று உத்தரவிட்டார்.