வயநாடு தேர்தல் முடிவை எதிர்த்து பா.ஜ., வழக்கு: பிரியங்காவுக்கு கேரள ஐகோர்ட் நோட்டீஸ்
வயநாடு தேர்தல் முடிவை எதிர்த்து பா.ஜ., வழக்கு: பிரியங்காவுக்கு கேரள ஐகோர்ட் நோட்டீஸ்
வயநாடு தேர்தல் முடிவை எதிர்த்து பா.ஜ., வழக்கு: பிரியங்காவுக்கு கேரள ஐகோர்ட் நோட்டீஸ்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் நடந்த லோக்சபா இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து பா.ஜ., வேட்பாளர் தொடர்ந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்காவுக்கு கேரள ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராகுல், இரண்டிலும் வெற்றி பெற்றார். தொடர்ந்து வயநாடு தொகுதியை அவர் ராஜினாமா செய்தார். இதனையடுத்து கடந்த ஆண்டு 2024 நவ.,13ல் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அவரின் சகோதரி பிரியங்காவும், பா.ஜ., சார்பில் நவ்யா ஹரிதாசும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பிரியங்கா 6,22, 338 ஓட்டுகள் பெற்று சுமார் 5 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பா.ஜ., வேட்பாளர் 1,09,939 ஓட்டுகள் மட்டுமே பெற்றார்.
இதன் பிறகு, நவ்யா ஹரிதாஸ் கேரள ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், '' குடும்பத்தினர் மற்றும் தனது சொத்துகள் குறித்த பல்வேறு முக்கிய தகவல்களை வேட்புமனுவில் பிரியங்கா மறைத்துவிட்டார். வாக்காளர்களிடம் செல்வாக்கும் செலுத்தும் நோக்கத்தில் அவர்களை தவறாக வழிநடத்தியதுடன், தவறான தகவலை தெரிவித்து உள்ளார். எனவே பிரியங்காவின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்,'' எனத் தெரிவித்து இருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதி பாபு, இந்த மனு குறித்து பதிலளிக்கும்படி பிரியங்காவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஆக.,11ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.