ஒரே நாளில் பெய்த 25 செ.மீ., மழையால் கொல்கட்டா மிதக்கிறது! 10 பேர் பலி
ஒரே நாளில் பெய்த 25 செ.மீ., மழையால் கொல்கட்டா மிதக்கிறது! 10 பேர் பலி
ஒரே நாளில் பெய்த 25 செ.மீ., மழையால் கொல்கட்டா மிதக்கிறது! 10 பேர் பலி
ADDED : செப் 24, 2025 03:13 AM

கொல்கட்டா: மேற்கு வங்க தலைநகர் கொல்கட்டாவில் விடிய, விடிய பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. மின் கம்பிகள் அறுந்து விழுந்தது, மின்சாரம் பாய்ந்தது உட்பட மழை தொடர்பான விபத்து, 10 பேர் உயிரிழந்தனர். 24 மணி நேரத்திற்குள், 25 செ.மீ., மழை கொட்டித் தீர்த்ததால் சாலை, ரயில், விமானப் போக்குவரத்து முடங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக ஸ்தம்பித்தது. மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. நவராத்திரி விழா துவங்கியதை அடுத்து, கொல்கட்டா நகரம் முழுதும் விழா கோலம் பூண்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, வி டிய பெய்த கனமழையால், தெற்கு மற்றும் கிழக்கு கொல்கட்டாவில் இடுப்பளவுக்கு மழை வெள்ளம் தேங்கியது. இதனால், சாலை மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.
தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளின் தரைதளத்தில் மழைநீர் புகுந்ததால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தது உட்பட மழை தொடர்பான விபத்துகளில் 10 பேர் உயிரிழந்தனர்.
''பராக்கா கால்வாய் முறையாக துார்வாரப் படாததே மழை நீர் நகருக்குள் தேங்கியதற்கு காரணம்,'' என, முதல்வர் மம்தா கூறினார்.
மேகவெடிப்பு இது குறித்து அவர் கூறியதாவது:
இது போன்ற ஒரு மழையை நான் பார்த்ததே இல்லை. மேகவெடிப்பு காரணமாக குறைந்த நேரத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளது.
மின்சாரம் பாய்ந்து சிலர் உயிரிழந்திருப்பது மிகவும் துரதிருஷ்டம். தனியார் மின்சார நிறுவனமான சி.இ.எஸ்.சி., தான் இதற்கு காரணம். நகருக்கு அந்நிறுவனம் தான் மின் வினியோகம் செய்கிறது.
நாங்கள் அல்ல. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகை யில் பணியாற்ற வேண்டியது அவர்களது கடமை. வர்த்தகத்தில் மட்டும் ஈடுபடும் அந்நிறுவனம், வினியோகத்தை நவீனமாக்கவில்லை.
அறுந்து விழுந்த மின் கம்பிகளை சீரமைக்க, பணியாளர்களை அந்நிறுவனம் களத்தில் இறக்கி விட வேண்டும். துர்கா பூஜைக்காக அமைக்கப்பட்ட பந்தல்களும், மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.
பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க அறிவு றுத்தப்பட்டுள்ளது. அலுவலகம் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வரலாறு காணாத அளவுக்கு பெய்த கனமழையால், தெற்கு மற்றும் மத்திய கொல்கட்டா பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ஹவுரா மற்றும் கொல்கட்டாவில் இருந்து புறப்பட்டுச் செல்லும் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. அதே போல், கொல்கட்டாவில் இருந்து பிற பகுதிகளுக்கு புறப்பட வேண்டிய 60க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
மோசமான வானிலை காரணமாக கொல் கட்டாவுக்கு வந்து சேர வேண்டிய 40க்கும் மேற்பட்ட விமானங்களும் தாமத மாக தரையிறங்கின. இதனால், விமான பயணியர் மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.
எச்சரிக்கை வடகிழக்கு வங்கக் கடலில், குறைந்த காற்றழுத்தம் நிலை கொண்டுள்ளதால், அடுத்து வரும் நாட்களுக்கும் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும், கிழக்கு மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடலையொட்டிய பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதால், அடுத்த சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும் கணித்துள்ளது.