பண மூட்டை வழக்கில் சிக்கிய நீதிபதி விசாரணைக்கு உதவ வக்கீல்கள் நியமனம்
பண மூட்டை வழக்கில் சிக்கிய நீதிபதி விசாரணைக்கு உதவ வக்கீல்கள் நியமனம்
பண மூட்டை வழக்கில் சிக்கிய நீதிபதி விசாரணைக்கு உதவ வக்கீல்கள் நியமனம்
ADDED : செப் 24, 2025 01:42 AM

புதுடில்லி : பண மூட்டை வழக்கில் சிக்கிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவுக்கு உதவ, இரண்டு வழக்கறிஞர்கள் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு, டில்லியில் சொந்தமாக உள்ள வீட்டில், மார்ச் 14ல் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு பணியின் போது ஓர் அறையில் இருந்து பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக, 500 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.
இது சர்ச்சைக்கு உள்ளானதை அடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மா பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் நடத்திய விசாரணையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானது. பதவி விலகும்படி உச்ச நீதிமன்றம் அவரை கேட்டுக் கொண்டது. ஆனால் அவர் முரண்டு பிடித்தார்.
கடந்த ஜூலை - ஆகஸ்டில் நடந்த பார்லி., மழைக்கால கூட்டத்தொடரில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யக் கோரி, பா.ஜ., மற்றும் காங்., உட்பட எதிர்க்கட்சிகளின் எம்.பி.,க்கள் கையெழுத்திட்டு லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நோட்டீஸ் அளித்தனர்.
இதை ஏற்ற அவர், உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, கர்நாடக உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா ஆகியோர் தலைமையில், விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டார்.
இந்த குழுவினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு உதவுவதற்காக, வழக்கறிஞர்கள் ரோஹன் சிங், சமீக் ஷா துவா ஆகியோர் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
குழுவின் விசாரணை முடியும் வரை, அவர்கள் ஆலோசகர்களாக தொடர்வர் என, அறிவிக்கப்பட்டுள்ளது.