ராமர் பாதையில் மதுக்கடைகள்: பா.ஜ.,வுக்கு காங்., கண்டனம்
ராமர் பாதையில் மதுக்கடைகள்: பா.ஜ.,வுக்கு காங்., கண்டனம்
ராமர் பாதையில் மதுக்கடைகள்: பா.ஜ.,வுக்கு காங்., கண்டனம்
ADDED : ஜூன் 13, 2025 05:08 AM

அயோத்தி:அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும் வழியான ராமர் பாதையில் மதுபானக் கடைகளை திறக்க அனுமதி அளித்த உத்தர பிரதேச அரசுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில், வரலாற்று சிறப்புமிக்க பால ராமர் கோவில் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. இதையடுத்து, அயோத்தியை உலகளாவிய ஆன்மிக சுற்றுலா தலமாக மாற்றுவதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக அயோத்தி வரும் பக்தர்கள், சுற்றுலா பயணியர் ராமரின் வாழ்க்கை வரலாற்றை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், 13 கிலோமீட்டர் தொலைவுக்கு ராமர் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
ராமர் கோவில் அமைந்துள்ள ராம ஜென்மபூமியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ராமர் பாதையிலேயே மதுக்கடைகள் செயல்படுவதாக, உத்தர பிரதேச காங்., தலைவர் அஜய் ராய் குற்றம்சாட்டியுள்ளார்.
பணம் சம்பாதிப்பதற்காக அயோத்தியில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இது அயோத்திக்கு ஒரு அவமானம் என்றும் கண்டனம் தெரிவித்தார்.
ராமரின் புனித நகரத்தில் மதுபானக் கடைகளை திறக்க அரசு எப்படி அனுமதித்தது? ராமர் பாதைக்கு அருகிலுள்ள மதுபானக் கடைகளுக்கு எப்போது உரிமங்கள் வழங்கப்பட்டன? இந்தக் கடைகள் அரசு அதிகாரிகளிடமிருந்து எவ்வாறு அனுமதி பெற்றன? உரிமங்களை வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? ஆம் எனில், எப்போது? என்று அடுக்கடுக்கான கேள்விகளையும் உ.பி., அரசுக்கு அஜய் ராய் எழுப்பி உள்ளார்.