Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/அமைச்சர் நிர்மலாவை சீண்டி 'வீடியோ': காமெடியன் குணால் அடுத்த சேட்டை

அமைச்சர் நிர்மலாவை சீண்டி 'வீடியோ': காமெடியன் குணால் அடுத்த சேட்டை

அமைச்சர் நிர்மலாவை சீண்டி 'வீடியோ': காமெடியன் குணால் அடுத்த சேட்டை

அமைச்சர் நிர்மலாவை சீண்டி 'வீடியோ': காமெடியன் குணால் அடுத்த சேட்டை

Latest Tamil News
மும்பை: மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை அவதுாறாக விமர்சித்த விவகாரத்தில் போலீசார் அனுப்பிய சம்மனையும் மீறி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை விமர்சித்து நகைச்சுவை பேச்சாளர் குணால் கம்ரா வெளியிட்டுள்ள 'வீடியோ' மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனாவைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக உள்ளனர்.

மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த பிரபல 'ஸ்டாண்ட் அப் காமெடியன்' எனப்படும் நகைச்சுவை மேடை பேச்சாளர் குணால் கம்ரா, சமீபத்தில் நடத்திய நிகழ்ச்சியில் துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவாரை அவதுாறாக விமர்சித்தார்.

இது, ஆளும் கூட்டணி அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே, குணால் கம்ரா நிகழ்ச்சி நடத்திய ஹாபிடட் ஸ்டூடியோவுக்குள் கடந்த வாரம் நுழைந்த சிவசேனா தொண்டர்கள், அதை அடித்து நொறுக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விதிகள் மீறி கட்டப்பட்டதாகக் கூறி அந்த ஸ்டூடியோவும் மாநகராட்சி அதிகாரிகளால் இடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, அஜித் பவார் உள்ளிட்டோரை கிண்டல் செய்த விவகாரத்தில் நேரில் ஆஜராகும்படி கம்ராவுக்கு, போலீசார் இரண்டு முறை சம்மன் அனுப்பி இருந்தனர்.

இந்நிலையில், ஸ்டூடியோவை அடித்து நொறுக்கியதை கண்டித்தும், மத்திய பா.ஜ., அரசின் செயல்பாடுகளை கிண்டல் செய்தும் குணால் கம்ரா புதிய வீடியோவை நேற்று முன்தினம் வெளியிட்டார்.

பிரபல ஹிந்தி திரைப்படமான மிஸ்டர் இந்தியா படத்தில் வரும், 'ஹவாய் ஹவாயி...' என்ற பாடலின் வரிகளை மாற்றிப் பாடியுள்ள கம்ரா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ஜி.எஸ்.டி., வரி விதிப்பு குறித்து மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார்.

அதில், 'மத்திய அரசால் கட்டப்பட்ட பாலங்கள் இடிந்து விழுகின்றன; மக்களின் வரிப்பணம் வீணாகிறது. இது குறித்து கவலைப்படாமல் பாப்கார்னுக்கு வரி விதிக்கப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களை விட அதிக வரி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் நடுத்தர வர்க்கத்தினர் உள்ளனர். ஆனால், அவர்களின் விருப்பங்களை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது' என, குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறியுள்ள குணால் கம்ரா, போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us