கர்னல் ஸோபியா குறித்து சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்க அமைச்சருக்கு உத்தரவு
கர்னல் ஸோபியா குறித்து சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்க அமைச்சருக்கு உத்தரவு
கர்னல் ஸோபியா குறித்து சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்க அமைச்சருக்கு உத்தரவு
ADDED : மே 16, 2025 12:27 AM

புதுடில்லி: நம் ராணுவத்தினர் நடத்திய, 'ஆப்பரேஷன் சிந்துார்' தொடர்பான தகவல்களை நாட்டு மக்களுக்கு, கர்னல் ஸோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங், வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் அவ்வப்போது தெரிவித்தனர்.
இந்நிலையில், ம.பி., யில் ஆளும் பா.ஜ.,வைச் சேர்ந்த அமைச்சர் விஜய் ஷா, இந்துார் அருகே உள்ள ரெய்குண்டாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசியபோது, 'தீவிரவாதிகளுக்கு அவர்கள் சமூகத்தைச் சேர்ந்த சகோதரியைக் கொண்டே, நம் பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்' என கர்னல் ஸோபியா பற்றி சர்ச்சையாக பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்த விவகாரத்தை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த ம.பி., உயர் நீதிமன்றம், அமைச்சர் விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்து, அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இதனால், அதிர்ச்சிஅடைந்த விஜய் ஷா, தன்னை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கூறுகையில், “அரசியலமைப்பு பதவிகளை வகிப்பவர்கள், தங்களுடைய பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் யார் என்று உங்களுக்கு தெரியும்.
''ஆனால், நீங்கள் பேசிய கருத்துக்கள் எந்த மாதிரியானவை என கொஞ்சமாவது புரிகிறதா? பேசும்போது புத்தியையும் பயன்படுத்த வேண்டும்.
''ம.பி., உயர் நீதிமன்றத்தில் நேரில் சென்று மன்னிப்பு கேளுங்கள். ஒரு நாளில் எதுவும் நடந்து விடாது,” என்றார்.
தள்ளுபடி
மேலும், தன்னை கைது செய்வதில் இருந்து இடைக்கால பாதுகாப்பு அளிக்கும்படி விஜய் ஷா விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதுபோல, அவருக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்படி, ம.பி., உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கும் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
எனினும், அமைச்சர் விஜய் ஷாவின் மனுவை, இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தலைமை நீதிபதி தெரிவித்தார்.