பெண்கள் ஆடை குறித்து விமர்சனம் மீண்டும் சர்ச்சையில் ம.பி., அமைச்சர்
பெண்கள் ஆடை குறித்து விமர்சனம் மீண்டும் சர்ச்சையில் ம.பி., அமைச்சர்
பெண்கள் ஆடை குறித்து விமர்சனம் மீண்டும் சர்ச்சையில் ம.பி., அமைச்சர்
ADDED : ஜூன் 06, 2025 12:33 AM

போபால்:பாஜ., மூத்த தலைவரும், மத்திய பிரதேச அமைச்சருமான கைலாஷ் விஜய்வர்கியா, பெண்கள் உடைகள் குறித்து பேசி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
ம.பி.,யில், முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
சர்ச்சை
இம்மாநில நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராக இருப்பவர் கைலாஷ் விஜய்வர்கியா. இவர் அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கலில் சிக்குவது வழக்கம்.
கடந்த 2022ல், இந்துாரில் நடந்த ஹனுமன் ஜெயந்தி நிகழ்வில், 'பெண்களை தெய்வ வடிவமாக பார்க்கிறோம். ஆனால் இப்போதுஉள்ள பெண்கள் அப்படி தெரிவதில்லை. அவர்கள் சூர்ப்பணகை போல இருக்கின்றனர்.
'கடவுள் உங்களுக்கு அழகான உடலைக் கொடுத்திருக்கிறார், குறைந்தபட்சம் ஒழுக்கமான ஆடைகளை அணியுங்கள்' எனப் பேசினார்.
இதற்கு பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், மீண்டும் பெண்கள் ஆடை குறித்து கைலாஷ் விஜய்வர்கியா சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
தெய்வத்தின் வடிவம்
இந்துாரில் நடந்த பொது நிகழ்ச்சியில் கைலாஷ் விஜய்வர்கியா பேசியதாவது:
குறைவாகப் பேசும் தலைவர் நல்லவர் என்பது போல, 'குறைவான ஆடைகளை அணியும் பெண் மிகவும் அழகாகக் கருதப்படுகிறார்' என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால், நான் அதை ஏற்கவில்லை. ஒரு பெண் தெய்வத்தின் வடிவம் என நம்புகிறேன்.
மெல்லிய ஆடைகளை அணியும் பெண்களை கவர்ச்சிகரமானவர்களாக நான் பார்க்கவில்லை. சில நேரங்களில் பெண்கள் என்னுடன், 'செல்பி' எடுக்க வருவர்.
நான் அவர்களிடம், அடுத்த முறை சரியான உடையில் வாருங்கள், பின் புகைப்படம் எடுப்போம் என்று சொல்லி அனுப்புவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.