Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ 'மல்டிபிளக்ஸ்' சினிமா கட்டணம் ரூ.200: கர்நாடக அரசு உத்தரவுக்கு ஐகோர்ட் தடை

'மல்டிபிளக்ஸ்' சினிமா கட்டணம் ரூ.200: கர்நாடக அரசு உத்தரவுக்கு ஐகோர்ட் தடை

'மல்டிபிளக்ஸ்' சினிமா கட்டணம் ரூ.200: கர்நாடக அரசு உத்தரவுக்கு ஐகோர்ட் தடை

'மல்டிபிளக்ஸ்' சினிமா கட்டணம் ரூ.200: கர்நாடக அரசு உத்தரவுக்கு ஐகோர்ட் தடை

UPDATED : செப் 24, 2025 02:44 AMADDED : செப் 24, 2025 02:43 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு: கர்நாடகாவில், 'மல்டிபிளக்ஸ்' தியேட்டர்களில் அதிகபட்ச கட்டணம், 200 ரூபாய் என்ற மாநில அரசின் உத்தரவுக்கு, அம்மாநில ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

கர்நாடக சினிமா ஒழுங்குமுறை (திருத்தம்) விதிகள் - 2025ஐ, மாநில அரசு இயற்றியது. இதன்படி, 'மல்டிபிளக்ஸ்' எனப்படும், ஒன்றுக்கும் மேற்பட்ட திரைகள் அடங்கிய திரையரங்குகளில், அதிகபட்சம் 200 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டது. அரசின் உத்தரவை எதிர்த்து, மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இம்மனு நீதிபதி ரவி ஹொசமணி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மல்டிபிக்ஸ்கள் சார்பில் வாதாடிய வக்கீல், 'மல்டிபிளக்ஸ்களுக்கான வாடகை, மின்சார செலவுகள் அதிகரித்து வருகின்றன. இதனால் லாப வரம்பு குறைந்துள்ளது.

'டிக்கெட் விலைகளை திடீரென நிர்ணயித்தால், இழப்புகள் அதிகமாகும். திரையரங்குகள், மல்டிபிளக்ஸ்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு, படிப்படியாக மூடப்படும். இது, இத்துறையில் பணியாற்றும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பாதிக்கும். ஒருதலைபட்சமாக எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு தடை விதிக்க வேண்டும்' என்றார்.

அரசு தரப்பு வக்கீல், 'மாநில அரசின் பட்ஜெட்டிலேயே சினிமா டிக்கெட் விலை உச்சவரம்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. டிக்கெட் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது' என்றார்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'மல்டிபிளக்ஸ்கள் அமைப்பதற்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. இங்கு டிக்கெட்டுகள், 200 ரூபாய் அல்லது அதற்கு கீழ் விற்க வேண்டும் என்று அரசால் கூற முடியாது. கர்நாடக சினிமா கட்டுப்பாடு திருத்த விதிகள் - 2025ன் கீழ் விலைகளை நிர்ணயிப்பது சட்டவிரோதம். எனவே, அரசின் உத்தரவுக்கு தற்காலிக தடை விதிக்கப் படுகிறது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும்' என்றார்.

இது குறித்து, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை முன்னாள் தலைவர் கோவிந்த் கூறுகையில், 'மற்ற மாநிலங்களில் அதிகபட்ச டிக்கெட் விலை, 150 ரூபாய். அவர்களிடம் இல்லாத சட்ட சிக்கல்கள், நமக்கு உள்ளனவா? இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் ,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us