''நீட் தேர்வு முறைகேட்டை மோடியால் தடுக்க முடியாதா'': ராகுல் கேள்வி
''நீட் தேர்வு முறைகேட்டை மோடியால் தடுக்க முடியாதா'': ராகுல் கேள்வி
''நீட் தேர்வு முறைகேட்டை மோடியால் தடுக்க முடியாதா'': ராகுல் கேள்வி
ADDED : ஜூன் 20, 2024 03:50 PM

புதுடில்லி: வியாபம் ஊழலை விட நீட் தேர்வு முறைகேடு பெரியது என்றும், ரஷ்யா - உக்ரைன் போரை தடுத்து நிறுத்தியதாக கூறிக்கொள்ளும் பிரதமர் மோடியால், இந்தியாவில் வினாத்தாள் கசிவதை தடுக்க முடியவில்லை எனவும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார்.
நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியது, பணத்தை பெற்றுக்கொண்டு வினாத்தாளை முன்கூட்டியே விற்றது உள்ளிட்ட பல முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மேலும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வியாபம் ஊழலை விட நீட் தேர்வு முறைகேடு பெரியது. ரஷ்யா - உக்ரைன் போரை மோடி தடுத்து நிறுத்தியதாக கூறுகிறார்கள். ஆனால் நரேந்திர மோடியால் இந்தியாவில் வினாத்தாள் கசிவதை தடுக்க முடியவில்லை. பா.ஜ.,வின் தாய் அமைப்பால் கல்வி முறை கைப்பற்றப்பட்டதே வினாத்தாள் கசிவுக்குக் காரணம்.
இது மாறாத வரை, வினாத்தாள் கசிவுகள் தொடரும். இது தேச விரோத செயல். அனைத்து நிறுவனங்களும் அந்த அமைப்பால் கைப்பற்றப்பட்டதால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது.
கல்வி முறையில் ஊடுருவல்
துணைவேந்தர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை; அவர்கள் ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த அமைப்பும் பா.ஜ.,வும் நமது கல்வி முறையை ஊடுருவி அழித்து விட்டன. பணமதிப்பிழப்பு மூலம் பொருளாதாரத்திற்கு நரேந்திர மோடி செய்ததை, தற்போது கல்வி முறையிலும் செய்துள்ளார். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்கள் தண்டிக்கப்படுவது மிகவும் முக்கியம்.
மோடியின் கவனம்
நீட் தேர்வு முறைகேடு மற்றும் யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டது குறித்து பார்லிமென்டில் நிச்சயம் கேள்வி எழுப்புவோம். நீட் தேர்வு மாணவர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. மாணவர்கள் மீது கவனம் செலுத்தாமல், பார்லிமென்டில் புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதில் மட்டுமே மோடி கவனம் செலுத்திவருகிறார்.
பா.ஜ., ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் குஜராத் தான் மோசடி மையங்களாக உள்ளன. இப்போது, நாம் ஒரு பேரழிவில் இருக்கிறோம் என்பதையும், எதுவும் செய்யாத ஒரு அரசு இங்கு உள்ளது என்பதையும் மக்கள் அறிந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


