Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/'ஒரே நாடு; ஒரே தேர்தல்' சட்ட மசோதா: தேர்தல் கமிஷனரிடம் ஆலோசிக்க முடிவு

'ஒரே நாடு; ஒரே தேர்தல்' சட்ட மசோதா: தேர்தல் கமிஷனரிடம் ஆலோசிக்க முடிவு

'ஒரே நாடு; ஒரே தேர்தல்' சட்ட மசோதா: தேர்தல் கமிஷனரிடம் ஆலோசிக்க முடிவு

'ஒரே நாடு; ஒரே தேர்தல்' சட்ட மசோதா: தேர்தல் கமிஷனரிடம் ஆலோசிக்க முடிவு

Latest Tamil News
: 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' சட்ட மசோதா குறித்து ஆலோசனை நடத்த வருமாறு தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உள்ளிட்டோருக்கு பார்லி., கூட்டு குழு அழைப்பு விடுத்துள்ளது.

நம் நாட்டில் அடிக்கடி நடத்தப்படும் தேர்தல்களால் ஏற்படும் செலவுகளை குறைக்கவும், தேர்தல் நடத்தை விதிகளால் வளர்ச்சிப் பணிகள் நிறுத்தப்படுவதை தடுக்கவும், 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' என்ற முறையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.

இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர் மட்ட குழுவை மத்திய அரசு அமைத்திருந்தது.

இந்த குழு சமர்ப்பித்த அறிக்கையை மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒருமனதாக ஏற்றது. இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு டிச.,17ம் தேதி, பார்லி.,யில், 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பா.ஜ., - எம்.பி., சவுத்ரி தலைமையிலான பார்லி கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.

சட்ட நிபுணர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் இந்தக் குழு தொடர்ந்து ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில், தேர்தல்களை நடத்தும் முழு அதிகாரம் படைத்த தலைமை தேர்தல் கமிஷனுடன் ஆலோசிக்க பார்லி., கூட்டுக் குழு முடிவு செய்துள்ளது.

எனவே, நாளை மற்றும் 17ம் தேதி நடக்கும் ஆலோசனையில் பங்கேற்க வருமாறு தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநரும், பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் உறுப்பினருமான கீதா கோபிநாத், மற்றொரு உறுப்பினரான சஞ்சீவ் சன்யால் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின், 23வது சட்ட கமிஷன் பிரதிநிதிகளிடமும் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கு முன் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, டி.ஓய்.சந்திரசூட், யூ.யூ.லலித் மற்றும் ஜே.எஸ்.கேஹர் ஆகியோரிடமும் பார்லி., கூட்டுக் குழு ஆலோசனை நடத்தியது.

- நமது சிறப்பு நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us