Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம்!: லோக்சபாவில் அமைச்சர் நிர்மலா விளக்கம்

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம்!: லோக்சபாவில் அமைச்சர் நிர்மலா விளக்கம்

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம்!: லோக்சபாவில் அமைச்சர் நிர்மலா விளக்கம்

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம்!: லோக்சபாவில் அமைச்சர் நிர்மலா விளக்கம்

ADDED : பிப் 06, 2024 12:29 AM


Google News
Latest Tamil News
'நிதி ஒதுக்கீடு விஷயங்களில், பா.ஜ., ஆட்சியில் அல்லாத மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறுவது, வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும், பொய் பிரசாரம். நிதிக் குழுதான் அனைத்தையும் முடிவு செய்கிறது. நிதி பகிர்வு விஷயத்தில், என் விருப்பு வெறுப்புகளுக்கு துளிகூட இடமில்லை,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

லோக்சபாவில், கேள்வி நேரத்தின்போது, காங்., -- எம்.பி., ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், ''பா.ஜ., ஆட்சி செய்யாத மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு, அவற்றின் நிதி ஆதார உரிமைகள் மறுக்கப்படுவதாக, நாடு முழுதும் ஒரு கருத்து உருவாகிஉள்ளது.

''உதாரணமாக, தங்கள் மாநிலத்திற்கு, மத்திய அரசு அநீதி இழைப்பதாக, ஒட்டுமொத்த கர்நாடக அமைச்சரவையும் குற்றஞ்சாட்டுகிறது. தமிழக அரசும் இதே குற்றச்சாட்டை வைக்கிறது. இதன் பின்னணி காரணங்கள் என்ன,'' என, கேள்வி எழுப்பினார்.

பகிர்ந்தளிப்பு

இதற்கு பதிலளித்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

நேரடி வரி வாயிலாக கிடைக்கும் நிதி, நிடி ஆயோக் அளிக்கும் பரிந்துரைகளின்படி மட்டுமே அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

மாநில ஜி.எஸ்.டி., வாயிலாக வசூலாகும், 100 சதவீத தொகையும் மாநிலங்களுக்கு மட்டுமே செல்கிறது. மத்திய ஜி.எஸ்.டி., வரி வசூலில், மத்திய - மாநில அரசுகளின் நிதி தொடர்புகள் அடங்கி உள்ளன.

அதனால், இந்த வரி வசூல் தொகையை, ஜி.எஸ்.டி., கவுன்சில், அவ்வப்போது ஆய்வு செய்து, அதன் பின்னரே பகிர்ந்தளிக்கப்படுகிறது.

மாநிலங்களின் கைகளில் இந்த நிதி நேரடியாக கிடைக்க வேண்டுமென்பதற்காக, 50 சதவீதமாக, முதலில் பிரிக்கப்பட்டு, பின் மீதமுள்ள முன் பின் தொகையும், அதற்கேற்ற வகையில், சரி செய்யப்பட்டு, மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய நிதி தொகை, முழுதுமாக நிவர்த்தி செய்யப்படுகிறது.

அதாவது ஒரு மாநிலத்திற்கு 50 சதவீத பங்கு அல்லாமல், 41 சதவீதம் தான் வழங்க வேண்டுமெனில், அதற்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படுகிறது.

சில மாநிலங்களுக்கு 52 சதவீதம் வழங்க வேண்டுமெனில், அந்த தொகையும் மாற்றி அமைக்கப்படுகிறது.

உள்நோக்கம்

மத்திய ஜி.எஸ்.டி., வரிவசூல் பகிர்வு விவகாரங்களிலும் கூட, மத்திய அரசு தலையிடுவதில்லை. மாறாக, மாநிலங்களுக்கு தரப்பட வேண்டிய வரித் தொகை எவ்வளவு என்பதையும், நிதிக்குழுதான் முடிவு செய்கிறது.

அந்த குழு அளிக்கும் விரிவான பரிந்துரைகளின்படிதான், இந்த நிதி மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

நிதிக்குழுவினர் ஒரு இடத்தில் உட்கார்ந்து முடிவு செய்யாமல், நாடு முழுதும் நேரில் சென்று, மாநில அரசுகளின் அமர்ந்து பேசி அதன்பின்தான் முடிவு செய்கின்றனர்.

ஒரு மாநிலத்தை, நானோ, என் கட்சியோ; விரும்புகிறோமா, இல்லையா என்பதற்கெல்லால் இதில் துளியளவு கூட இடமில்லை. என் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டு இவ்விஷயங்களை கையாள்வதற்கு எனக்கு எந்தவித உரிமையும் இல்லை.

நான் மட்டுமல்ல, எந்த நிதியமைச்சராலும் இதுதான் முடியும். எனக்கு இந்த மாநிலம் பிடிக்காது, அதனால் நிதியை நிறுத்துங்கள் என, எந்த நிதியமைச்சராலும் கூறவே முடியாது.

எனவே பாரபட்சம் இல்லாமல், எதற்கும் அஞ்சாமல் நிதிக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதை மட்டுமே ஒரு நிதியமைச்சர் செய்ய முடியும்.

மேலும், சட்ட திட்ட அமைப்புகள், மிகவும் தெளிவாக உள்ளன. எனவே, சில மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறுவதெல்லாம் எதிர்க் கட்சிகள் வேண்டு மென்றே திட்டமிட்டு உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் பொய் பிரசாரம்.

இவ்வாறு அவர் பேசினார்.

--நமது டில்லி நிருபர்-





      Our Apps Available On




      Dinamalar

      Follow us