முன்ஜாமின் கோரும் மனுக்களை 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு
முன்ஜாமின் கோரும் மனுக்களை 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு
முன்ஜாமின் கோரும் மனுக்களை 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு
ADDED : செப் 13, 2025 02:18 AM

'முன்ஜாமின் கோரும் மனுக்களை அதிகபட்சம் ஆறு மாதங்களுக்குள் முடித்து வைக்க வேண்டும்' என, அனைத்து உயர் நீதிமன்றங்கள், விசாரணை நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மூன்று பேர் கடந்த 2019ல், குற்ற வழக்கில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
பல ஆண்டுகள் கடந்து சில வாரங்களுக்கு முன் அந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் முன்ஜாமின் வழங்க மறுத்தது. இதற்கு எதிராக சம்பந்தப்பட்ட நபர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
அந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி பர்த்திவாலா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், 'முன்ஜாமின் கேட்ட வழக்கு கூட நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்திருக்கிறது. ஒருவர் மனு தாக்கல் செய்து அது விசாரிக்கப்பட்டு உத்தரவு வருவதற்குள் அந்த நபர் கைது செய்யப்பட்டால், அவர் வழக்கமான ஜாமின் கேட்க வேண்டி இருக்கும்.
'அதற்குள் அந்த முன்ஜாமின் மனுவை நீதிமன்றம் முடித்து வைத்திருக்க வேண்டும். எனவே, முன் ஜாமின் கேட்கக்கூடிய மனுக்கள் மீது குறைந்தபட்சம் மூன்று மாதம் அதிகபட்சம் ஆறு மாதங்களுக்குள் விசாரணை நீதிமன்றம் அல்லது சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்கள் முடிவெடுக்க வேண்டும்' என, அறிவுறுத்தினர்.
-- டில்லி சிறப்பு நிருபர் -