பாக்., தாக்குதல்: காஷ்மீரில் அதிகாரி உட்பட 5 பேர் பலி
பாக்., தாக்குதல்: காஷ்மீரில் அதிகாரி உட்பட 5 பேர் பலி
பாக்., தாக்குதல்: காஷ்மீரில் அதிகாரி உட்பட 5 பேர் பலி
ADDED : மே 11, 2025 02:31 AM

ஜம்மு: ஜம்மு - -காஷ்மீரில் பாக்., நடத்திய பீரங்கி தாக்குதல்களில் அரசு அதிகாரி, 2 வயது குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பழிதீர்க்கும் விதமாக, பாக்., மீது 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையை இந்தியா துவங்கியது.
நம் நாட்டின் எல்லையோரப் பகுதிகளில் ட்ரோன்களை வீசியும், பீரங்கியால் சுட்டும் பாக்., படையினர் தாக்கினர். குறிப்பாக ஜம்மு - -காஷ்மீரின் எல்லையோரத்தில் கனரக பீரங்கிகளால் அத்துமீறி சுட்டனர்.
ரஜோரியில் உள்ள தன் அரசு அலுவலக இல்லத்தில், மாவட்ட கூடுதல் வளர்ச்சி அதிகாரி ராஜ்குமார் தாப்பா, 54, உதவியாளர்களுடன் நேற்று அதிகாலை ஆலோசனை நடத்தியபோது, பீரங்கியால் பாக்., படையினர் சரமாரியாக சுட்டனர்.
அதில், ராஜ்குமார், அவரது உதவியாளர்கள் இருவர் காயமடைந்தனர்.
அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே ராஜ்குமார் உயிரிழந்தார்.
ஜம்முவின் ரூப் நகரில் உள்ள ராஜ்குமாரின் வீட்டுக்கு முதல்வர் ஒமர் அப்துல்லா நேரில் சென்று, ராஜ்குமாரின் தந்தை துர்காதாசை கட்டி அணைத்து ஆறுதல் கூறினார்.
இதற்கிடையே, ரஜோரி நகரின் தொழிற்சாலை பகுதிக்கு அருகே, பாக்.,கின் குண்டுவீச்சில் சிக்கி, ஆயிஷா, 2, முகமது ஷோஹிப், 35, ஆகிய இருவர் உயிரிழந்தனர்.
மேலும், மூன்று பேர் காயமடைந்தனர். பூஞ்ச் மாவட்டத்தின் எல்லையோர கிராமமான மந்தேர் பகுதியில் உள்ள கங்க்ரா கல்குட்டாவில் நடந்த பீரங்கி தாக்குதலில், வீட்டில் இருந்த ரஷிதா பீவி, 55, என்ற பெண் பலியானார்.
ஜம்மு மாவட்டத்தின் எல்லையோர கிராமமான பிடிபுர் ஜட்டாவில் அசோக் குமார் என்பவர் பீரங்கி தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இவர்கள் தவிர, நவ்ஷெரா, பூஞ்ச் மற்றும் ஜம்மு நகரின் ரெகாரி, ரூப் நகர் ஆகியவற்றில் நடந்த ட்ரோன் தாக்குதலில் பலர் காயம்அடைந்து, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.