சேதமடைந்த விமானப்படை தளங்களை தார்ப்பாய் போட்டு மூடியது பாகிஸ்தான்
சேதமடைந்த விமானப்படை தளங்களை தார்ப்பாய் போட்டு மூடியது பாகிஸ்தான்
சேதமடைந்த விமானப்படை தளங்களை தார்ப்பாய் போட்டு மூடியது பாகிஸ்தான்
ADDED : ஜூன் 12, 2025 12:32 AM

புதுடில்லி: நம் பாதுகாப்பு படையினர் நடத்திய, 'ஆப்பரேஷன் சிந்துார்' தாக்குதலில், பாகிஸ்தானில் சேதம் அடைந்த விமானப்படை தளங்களை தார்ப்பாய் போட்டு, அந்நாட்டு அரசு மூடி மறைத்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை நம் ராணுவத்தினர் 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் தகர்த்தனர்.
இதுதவிர, அந்நாட்டின் முரித்கே, ஜகோபாபாத், போலாரி உள்ளிட்ட ராணுவ மற்றும் விமானப்படை தளங்கள் கடும் சேதமடைந்தன. இதை பாகிஸ்தான் மறுத்தது.
இருநாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு ஒரு மாதமான நிலையில், சேதம் அடைந்த விமானப் படை தளங்களை பாக்., ராணுவம் தார்ப்பாய்கள் போட்டு மூடியுள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
'மேக்ஸார்' என்ற தனியார் நிறுவனம் சார்பில் பாகிஸ்தானில் உள்ள சேதமடைந்த விமானப்படை தளங்களின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
கடந்த மாதம் 10ம் தேதி நம் ராணுவம் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முரித்கே விமானப்படை தளம் கடும் சேதமடைந்தது. தற்போது, அத்தளத்தின் மீது பச்சை நிற தார்ப்பாய் போர்த்தப்பட்டுள்ளது.
சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணிகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதேபோல் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள போலாரி விமானப்படை தளமும், நம் பாதுகாப்பு படையினரின் தாக்குதலுக்கு இலக்கானது.
அப்போது சேதமடைந்த பகுதிகள் தெளிவாக தெரிந்த நிலையில், தற்போது, அத்தளத்தின் மீது தார்ப்பாய் போட்டு மூடப்பட்டுள்ளது.
மற்றொரு விமானப்படை தளமான ஜகோபாபாதில், இதே நிலை நீடிக்கிறது. கடந்த மாதம் 11ல் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களில், சேதமடைந்த பகுதிகள் தெளிவாக தெரிந்தன; ஆனால், சமீபத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள், பாதிக்கப்பட்ட இடங்களில் அந்நாட்டு அரசு சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதை சுட்டிக்காட்டியுள்ளன.
இதன் வாயிலாக, நம் பாதுகாப்பு படையினர் தாக்குதலில் சேதமடைந்த பகுதிகளை, மறைக்க இத்தகைய ஏற்பாடுகளை பாக்., அரசு மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், செயற்கைக் கோள் புகைப்படங்களின் வாயிலாக அதன் செயல்பாடுகள் வெட்ட வெளிச்சமாகியுள்ளன.
இதற்கிடையே, இந்தியாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதாக கூறி, அந்நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகளை வழங்கி, பாகிஸ்தான் அரசு கவுரவித்து வருகிறது.