நள்ளிரவில் 500 ட்ரோன்கள் அனுப்பி பாக்., அட்டகாசம்; பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
நள்ளிரவில் 500 ட்ரோன்கள் அனுப்பி பாக்., அட்டகாசம்; பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
நள்ளிரவில் 500 ட்ரோன்கள் அனுப்பி பாக்., அட்டகாசம்; பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
ADDED : மே 10, 2025 07:57 AM

பாகிஸ்தான் கடந்த மூன்று நாட்களாக, சீனா, துருக்கி நாடுகளிடம் கடன் வாங்கிய ட்ரோன்களை தொடர்ச்சியாக அனுப்பி, இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. ஆனால், இந்தியா அவற்றை இடைமறித்து அழித்து வருகிறது.
சர்வதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள, ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில், 'ட்ரோன்கள்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களை அனுப்பி, பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. அப்பாவி மக்கள் வசிக்கும் இடங்களில், பாக்., பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்றிரவு, உச்சகட்டமாக, 500 ட்ரோன்களை, காஷ்மீரில் பாரமுல்லாவில் இருந்து, குஜராத்தின் கட்ச் வரை, 26 நகரங்களை குறிவைத்து, பாகிஸ்தான் அனுப்பியது.
திரளாக வந்த ட்ரோன்களை, இந்திய ராணுவம் வானிலேயே அழித்து ஒழித்தது. காஷ்மீரின் அவந்திபுரா விமான படைதளத்தை குறி வைத்து பாக்., ஏவிய ட்ரோன்கள் அழிக்கப்பட்டன. வெடிமருந்துகளை ஏற்றி வந்த ஒரு ட்ரோனின் பாகங்கள், பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்தது. இதில் வீடு தீப்பற்றி எரிந்தது. மூன்று பேர் காயமடைந்தனர்.
பீரங்கி தாக்குதல் காரணமாக, கட்டுப்பாடு எல்லைக்கோடு அருகேயுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
நமது வலிமையான வான்பாதுகாப்பு கவசங்களால், பாகிஸ்தானின் ஆயுதங்கள் நிர்மூலமாக்கப்பட்டு வருகின்றன. பாகிஸ்தானின் அடாவடி செயலுக்கு இந்தியா தக்க பதிலடி தரும் என, ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா ட்ரோன் தாக்குதல் நடத்தியது. கரியான் நகர், ஜெலாப்பூர் ஜெட்டான் ஆகியவற்றை குறி வைத்து இந்த தாக்குதல் நடந்தது.
-நமது நிருபர்-