ரூ.1600 கோடி போதாது… ரூ.20,000 கோடி வெள்ள நிவாரண நிதி வேண்டும்: மத்திய அரசிடம் கேட்கும் பஞ்சாப்
ரூ.1600 கோடி போதாது… ரூ.20,000 கோடி வெள்ள நிவாரண நிதி வேண்டும்: மத்திய அரசிடம் கேட்கும் பஞ்சாப்
ரூ.1600 கோடி போதாது… ரூ.20,000 கோடி வெள்ள நிவாரண நிதி வேண்டும்: மத்திய அரசிடம் கேட்கும் பஞ்சாப்
ADDED : செப் 26, 2025 03:10 PM

சண்டிகர்: கடும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் ரூ.20,000 கோடி நிதி தரவேண்டும் என்று மத்திய அரசை, பஞ்சாப் வலியுறுத்தி இருக்கிறது.
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பஞ்சாபில் கனமழை, வெள்ளம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் கடும் பாதிப்பில் சிக்கி தவிக்கின்றனர்.
மீட்புப் பணிகள் ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டு இருந்தாலும் மக்கள் இன்னமும் இயல்பு வாழ்க்கை நோக்கி நகர இயலாமல் உள்ளனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் பிரபலங்கள் நிவார பணிகளில் இறங்கி உள்ளனர். மத்திய அரசு முதல் கட்டமாக ரூ. 1600 கோடி நிதியை அறிவித்துள்ளது.
இந் நிலையில் இந்த நிதி போதாது, மத்திய அரசு ரூ. 20,000 கோடி சிறப்பு நிவாரண நிதியை அறிவிக்க வேண்டும் என்று பஞ்சாபை ஆளும் ஆம் ஆத்மி அரசு வலியுறுத்தி இருக்கிறது. இன்று (செப்.26) தொடங்கிய சட்டசபை சிறப்புக் கூட்டத்தொடரில் வெள்ளபாதிப்பு தொடர்பான விவாதத்தின் போது இதுதொடர்பான தீர்மானம் அவையில் முன்மொழிப்பட்டுள்ளது.
நீர்வளத்துறை அமைச்சர் பரீந்தர் கோயல் இதுதொடர்பான தீர்மானம் ஒன்றை அவையில் கொண்டு வந்தார். தற்போது ஏற்பட்டுள்ள பேரழிவானது 1955ம் ஆண்டு மற்றும் 1978ம் ஆண்டுகளில் ஏற்பட்டு இருப்பதை விட மிகவும் மோசமானது, ஐந்து லட்சம் ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் வீணானது, ஈடுசெய்ய முடியாத சேதம் ஏற்பட்டுள்ளதாக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பாஜ தலைமையிலான மத்திய அரசு, ரூ,20,000 கோடி சிறப்பு நிவாரண நிதியை அறிவிக்க வேண்டும். மேலும் பிரதமர் அறிவித்த ரூ.1600 கோடி நிதியும் இன்னமும் மாநில அரசின் கருவூலத்துக்கு வந்து சேரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.